ரஷ்யாவுக்கு உதவ வேண்டாம்... சீனாவிடம் பிரித்தானியா வலியுறுத்தல்
பிரித்தானியாவில் புதிய அரசு பொறுப்பேற்றபின், முதன்முறையாக பிரித்தானிய வெளியுறவுத்துறைச் செயலர் சீனாவுக்குச் சென்றுள்ளார்.
முதன்முறையாக சீனா சென்றுள்ள வெளியுறவுத்துறைச் செயலர்
பிரித்தானிய வெளியுறவுத்துறைச் செயலரான David Lammy, இரண்டு நாள் பயணமாக சீனா சென்றுள்ள நிலையில், நேற்று அவர் சீன துணை பிரீமியரான Ding Xuexiang மற்றும் சீன வெளியுறவு அமைச்சரான Wang Yi ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர், ரஷ்யாவுக்கு உதவிகள் செய்வது குறித்து விசாரிப்பதுடன், அத்தகைய உதவிகளை சீனா தவிர்க்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், மத்திய கிழக்கு விவகாரம் மற்றும் புவிசார் அரசியல் முதலான விடயங்கள் தொடர்பில் விவாதங்களைத் தொடரவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.
உக்ரைன் போர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு, உளவு குற்றச்சாட்டுகள், ஹொங்ஹொங் விவகாரத்தில் பொதுமக்களின் உரிமைகள் முதலான விடயங்களால் பாதிக்கப்பட்டுள்ள இருதரப்பு உறவுகளை சீராக்கும் முயற்சியின் ஒருபகுதிதான் பிரித்தானிய வெளியுறவுத்துறைச் செயலரின் சீனப்பயணத்தின் நோக்கமாகும்.
பிரித்தானிய வெளியுறவுத்துறைச் செயலரான டேவிட் சீன தரப்பு பிரதிநிதிகளை சந்தித்தபின் அறிக்கை ஒன்றை வெளியிட்ட பிரித்தானிய வெளியுறவு அலுவலகம், ரஷ்யாவுக்கு சீனா உதவிகள் செய்வது தொடர்பில் டேவிட் கவலை தெரிவித்ததாகவும், அப்படி ரஷ்யாவுக்கு உதவுவது, ரஷ்யப் போரை நீட்டிக்க உதவும் என்றும், ஐரோப்பாவுடனான சீனாவின் உறவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்ததாகவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |