இனி டிரம்ப்புக்கு நேரப் போகும் கதி இது தான்! விதியும் சிறப்பாக இல்லை: ஈரான் அதிபர் பகிரங்க எச்சரிக்கை
ஈராக் அதிபர் சதாம் உசேனுக்கு நேர்ந்த கதி, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நேரலாம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி, சமீபத்தில் அரசு தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், எங்களது சமீபத்திய வரலாற்றில் நாங்கள் இருவிதமான மோசமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறோம். ஒருவர் டிரம்ப், மற்றொருவர் சதாம் உசேன்.
இதில் சதாம் உசேன் எங்களுடன் போரில் ஈடுபட்டார். ட்ரம்ப் எங்களுடன் பொருளாதாரப் போரில் ஈடுபட்டார். இரண்டிலும் ஈரான் வெற்றி பெற்றுவிட்டது.
சதாம் உசேன் அவரின் குற்றத்திற்குத் தண்டனை பெற்றுவிட்டார். அது போன்று தான் ட்ரம்ப்பின் விதியும் சிறப்பாக இருக்கப் போவதில்லை. சதாமுக்கு நேர்ந்த கதி டிரம்ப்புக்கு நேரலாம் என்று தெரிவித்துள்ளார்.
இராக்கில் ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சியை நடத்துகிறார் என்றும், ஷியா இஸ்லாமியர்களை கொல்கிறார் என்று 2003ஆம் ஆண்டு சதாமின் ஆட்சியை அமெரிக்கா கவிழ்த்தது.
இதனைத் தொடர்ந்து சதாம் தலைமறைவானார். அமெரிக்கப் படையால் பிடிக்கப்பட்ட சதாம் உசேன், 2006-ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.
அதே போன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் ஈரான் போக்கையே கடை பிடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.