இது தொடக்கம் தான்... புதிய அரசியல் கட்சி தொடங்கும் டொனால்டு டிரம்ப்: பெயர் என்ன தெரியுமா?
ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குடியரசுக்கட்சியில் இருந்து வெளியேறி, தமது ஆதரவாளர்களுடன் புதிய அரசியல் கட்சி ஒன்றை துவக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவை மீண்டும் சிறப்பான நாடாக்குவோம் என்ற தமது முழக்கத்தின் ஒருபகுதியாகவே புதிய அரசியல் கட்சி இருக்கும் எனவும், இது ஒரு தொடக்கம் மட்டுமே என்றும் தமது முக்கிய ஆதரவாளர்களிடம் டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் தமது புதிய கட்சிக்கு தேசபக்த கட்சி (Patriot Party) என பெயர் சூட்டவும் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
கடந்த ஒரு வார காலமாக தமது முக்கிய ஆதரவாளர்கள் பலருடவும், தமக்கு நெருங்கிய வட்டாரத்திலும் புதிய அரசியல் கட்சி தொடர்பில் டொனால்டு டிரம்ப் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளைமாளிகை நிர்வாகிகள், கடந்த வாரமே பதிலளிக்க மறுத்துள்ளதாக முக்கிய நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக செவ்வாயன்று, ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து தனது பிரியாவிடை செய்தியை வழங்கிய போதும், அமெரிக்காவை சிறப்பான நாடாக மாற்றும் தமது திட்டம் வெறும் தொடக்கம் மட்டுமே என்றும், அதற்காக தாம் தொடர்ந்து பணியாற்ற இருப்பதாகவும் அவர் உறுதி அளித்திருந்தார்.
மட்டுமின்றி, வன்முறை ஒருபோதும் தீர்வாகாது எனவும், அதை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் அவர் எச்சரிக்கை செய்தார்.
புதிய நிர்வாகம் பொறுப்பேற்க உள்ளதாக குறிப்பிட்ட டிரம்ப், அமெரிக்காவை பாதுகாப்பாகவும் வளமாகவும் வைத்திருப்பதில் அந்த நிர்வாகத்தின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யுங்கள் எனவும் அமெரிக்க மக்களை கேட்டுக்கொண்டார்.
தமது ஆட்சி காலம், மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளதாக குறிப்பிட்ட டொனால்டு டிரம்ப்,
"நாம் எதற்காக பொறுப்புக்கு வந்தோமோ, அதனை செய்து முடித்துள்ளோம்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இதுவரையான அனைத்து மரபுகளையும் மீறியுள்ள டொனால்டு டிரம்ப், 20 ம் திகதி புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல், உள்ளூர் நேரப்படி பகல் 8 மணிக்கே வெள்ளைமாளிகையில் இருந்து குடும்பத்துடன் வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதிகள் உத்தியோகப்பூர்வாமாக பயன்படுத்தும் விமானத்திலேயே அவர் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள தமது பண்ணை வீட்டுக்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

