மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார் டொனால்டு டிரம்ப்: வெளியான புதிய தகவல்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது மிக ஆபத்தான நிலையில் இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில், வெள்ளைமாளிகையும் அதிகாரிகள் தரப்பும் இதை மக்களிடம் இருந்து அப்போது மறைத்ததாக பிரதான பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
டொனால்டு டிரம்புக்கு மிகவும் நெருக்கமான நால்வர் இத்தகவலை தற்போது வெளியிட்டுள்ளனர்.
மட்டுமின்றி அமெரிக்க மக்களுக்கு அதுவரை அளிக்கப்படாத பரிசோதனை முயற்சியான மருந்துகளை டிரம்புக்கு அளிக்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் 1ம் திகதி டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக வெள்ளைமாளிகை அதிகாரிகள் அறிவித்தனர்.
அதற்கு முந்தைய நாள் இரவு, டிரம்பும் அவர் மனைவியும் கிளீவ்லேண்டிற்கு பயணம் செய்திருந்தனர், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கு எதிரான முதல் நேரடி விவாதத்தில் அவர் பங்கேற்க சென்றிருந்தார்.
வெள்ளைமாளிகையில் இருந்து டொனால்டு டிரம்ப் இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது அவரது ஆக்ஸிஜன் அளவு ஆபத்தான நிலையில் குறைந்திருந்ததாகவும், நிமோனியாவுக்கான அறிகுறிகள் அவருக்கு வெளிப்படையாகவே தெரிந்தது என்கிறார்கள் அந்த பெயர் வெளியிடாத நால்வர்.
தேர்தல் பிரச்சார நெருக்கடி இருந்து வந்ததால், மூன்று நாட்களில் அவரை குணமடைய வைத்துள்ளனர் மருத்துவர்கள்.
ஆனால், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட சான்றிதழ் இதுவரை மருத்துவமனை நிர்வாகம் வழங்கப்படவில்லை எனவும், அது மர்மமாகவே உள்ளது எனவும் குறித்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

