போரை முடிவுக்குக் கொண்டுவர... உக்ரைன் பிராந்தியம் ஒன்றை கைப்பற்ற துடிக்கும் புடின்
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் இருந்து உக்ரைன் படைகள் முழுமையாக விலகினால், அதற்கு ஈடாக, போரை நிறுத்த ரஷ்யா தயாராக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் முழுமையாக
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் சாத்தியமான உடன்பாட்டைக் கண்டறியும் பொருட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் சமீபத்தில் அலாஸ்காவில் சந்தித்தனர்.
ஆனால் அவர்களின் மூன்று மணி நேரம் நீடித்த சந்திப்பானது எந்த முடிவையும் எட்டாமல் முடிவுக்கு வந்தது. இந்த சந்திப்பின் போது, பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கும் என்று புடின் பகிரங்கமாகக் கூறியிருந்தார்.
ஆனால் தற்போது டான்பாஸ் பிராந்தியத்தில் இருந்து உக்ரைன் முழுமையாக விலக வேண்டும் என்ற கோரிக்கையை புடின் வைத்துள்ளார். இதற்கு ஈடாக போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா தயார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டான்பாஸ் என்று அழைக்கப்படும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளின் முக்கியத்துவத்தை புடின் அடிக்கடி வெளிப்படுத்தி வந்துள்ளார். புடினைப் பொறுத்தவரை, டான்பாஸ் ரஷ்யாவுடன் ஆழமான வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளது மற்றும் அதன் சோவியத் கால மரபின் ஒரு பகுதி என்றும் குறிப்பிடுகிறார்.
ஆனால், சட்டத்திற்கு உட்பட்டு டான்பாஸ் பகுதி தற்போது உக்ரைன் வசமுள்ளது. இந்தப் பிராந்தியம் ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ளது, ஆனால் மொழி மற்றும் கலாச்சாரத்தில் ரஷ்யாவுடன் வலுவான ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொள்கிறது.
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து சோவியத் சகாப்தம் முழுவதும், டான்பாஸ் ஒரு தொழில்துறை மையமாக இருந்து வருகிறது, இயற்கை வளங்கள் நிறைந்ததாக உள்ளது, இது மூலோபாய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
பாதுகாக்க வேண்டிய கடமை
கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள டான்பாஸ், ஒரு முக்கிய தொழில்துறை மையமாகும். அங்குள்ள பெரும்பாலான மக்கள் ரஷ்ய மொழி பேசுகிறார்கள், மேலும் அவர்கள் பெரும்பாலும் ரஷ்யாவை ஆதரிப்பவர்களாகக் காணப்படுகிறார்கள்.
இதனாலையே, 2014 இல் ரஷ்யா கிரிமியாவை கைப்பற்றியதிலிருந்து, டான்பாஸ் பிராந்தியமாந்து பதட்டங்களின் மையத்தில் இருந்து வருகிறது. மேலும், டான்பாஸ் மக்கள் தங்களை உக்ரைனின் ஒரு பகுதியாகப் பார்க்கவில்லை என்றும், அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாகவும் ரஷ்யா கூறி வருகிறது.
டான்பாஸ் பகுதி உக்ரைனுக்கு ஒரு முக்கியமான பொருளாதார மற்றும் தவிர்க்க முடியாத சொத்தாக விளங்குகிறது, நிலக்கரி சுரங்கம் மற்றும் கனரக தொழில்துறைக்கு ஒரு முக்கிய மையமாக செயல்படுகிறது.
டான்பாஸ் மீது ரஷ்யா முழு கட்டுப்பாட்டை அடைந்தால், உக்ரைன் கணிசமான பொருளாதார பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும், மேலும் அந்தப் பகுதியில் தங்களுக்கான செல்வாக்கையும் இழக்க நேரிடும்.
தற்போது, டான்பாஸின் பெரும்பகுதியை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது, ஆனால் முழுப் பகுதியும் இன்னும் கைப்பற்றவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |