நாங்கள் தான் பொறுப்பு... பேருந்துடன் 40 பேர் படுகொலை தொடர்பில் பகீர் கிளப்பிய ஐ.எஸ்.ஐ.எஸ்
சிரியாவில் பேருந்தில் சென்ற 40 ராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஐ.எஸ் பயங்கரவாத குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு சிரியாவில் வியாழனறு ராணுவத்தினர் சென்ற பேருந்து ஒன்று மீது கும்பல் ஒன்று கண்மூடித்தனமாக தாக்குதல் முன்னெடுத்தது.
இந்த கொடூர தாக்குதலில் சுமார் 40 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
சிரியா ராணுவத்தினர் விடுமுறையை கழிக்க சென்ற போதே இந்த தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 8 உயர் அதிகாரிகளும் கொல்லப்பட்டதுடன், காயங்களுடன் 12 ராணுவத்தினர் உயிர் தப்பியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையிலேயே வியாழனன்று முன்னெடுக்கப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்று, ஐஎஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டதுடன், ஜனாதிபதி ஆசாத் மீது கடும் சொற்களால் வசைபாடியுள்ளது.
தாக்குதலின் முறையை ஆராய்ந்த நிபுணர்கள் முதலில் ஐஎஸ் அமைப்பு மீது சந்தேகம் எழுப்பியிருந்தனர்.
ஆனால் அவ்வாறான ஒரு சக்தி வாய்ந்த தாக்குதலை முன்னெடுக்கும் வகையில் சிரியாவில் ஐஎஸ் அமைப்பு இல்லை என்றே நிபுணர்கள் தரப்பு நம்பிக்கை தெரிவித்திருந்தது.
தற்போது அந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர்கள் மீண்டும் ஒருங்கிணைந்துள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.