மெலனியா டிரம்பின் அமைதி முயற்சி: ஒலேஷ்கியிலிருந்து வெளியேறும் நூற்றுக்கணக்கான உக்ரைனியர்கள்
Dozens of Ukrainians Evacuated From Oleshky following peace truce: அமெரிக்காவின் அமைதி முயற்சியின் ஒரு பகுதியாக ஓலேஷ்கியில் இருந்து நூற்றுக்கணக்கான உக்ரைனியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
உக்ரைனிய மக்கள் வெளியேற்றம்
உக்ரைன் உடனான போர் நடவடிக்கை தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து ஒலேஷ்கி(Oleshky) நகரம் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்பின் முயற்சியால் உக்ரைன் - ரஷ்யா இடையே தற்காலிக மனிதநேய போர் நிறுத்த ஒப்பந்தம் உருவாகியுள்ளது.

இந்த அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒலேஷ்கி நகரில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஒலேஷ்கி நகரில் இருந்து உக்ரைனிய மக்களை வெளியேற்றும் இந்த மீட்பு நடவடிக்கை எந்தவொரு இடையூறும் இன்றி மிகவும் வெற்றிகரமாக நடந்தேறி இருப்பதாக இருதரப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட 4 மணி நேர இடைவெளிக்குள் சுமார் 750 பொதுமக்களை அழைத்துச் செல்ல 25 பேருந்துகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் சேவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ரஷ்யா மற்றும் உக்ரைனிய தலைவர்களின் முழு சம்மதத்துடன் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு இருப்பது மெலனியா டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

உக்ரைனியர்கள் நாடு திரும்பும் சிக்கலான பாதை
ஒலேஷ்கி நகரில் இருந்து வெளியேற்றப்படும் உக்ரைனியர்கள் முதலில் தெற்கு ரஷ்யாவில் உள்ள அனாபா நகரத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து ரஷ்ய அரசுக்கு சொந்தமான விமானம் மூலம் பெலாரஸின் கோமெல் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து நிலம் வழியாக உக்ரைனின் செர்னிஹிவ் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
ஒலேஷ்கி நகரில் இருந்த பெரும்பாலான உக்ரைனியர்கள் வெளியேறிவிட்ட நிலையில், சிலர் மட்டும் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியிலேயே தங்கி விட முடிவு செய்துள்ளனர்.