காரில் தனியாக பயணித்தால் வரி - இந்திய நகரத்தில் வர உள்ள புதிய திட்டம்
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காரில் ஒருவர் மட்டும் பயணித்தால் வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூரு போக்குவரத்து நெரிசல்
இந்தியாவின் ஐடி துறையின் தலைநகராக கருதப்படும் பெங்களூரு, பல ஆண்டுகளாக டிராபிக் பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது.
அவுட்டர் ரிங் ரோடு(ORR) போன்ற முக்கிய சாலைகளில் சில கிலோமீட்டர் தூரங்களை கடக்கவே பல மணி நேரம் ஆகும் நிலையில், இந்தியாவின் மிகுந்த போக்குவரத்து நெரிசல் உள்ள நகரமாக பெங்களூரு கருதப்படுகிறது.
இந்த போக்குவரத்து பிரச்சினையை சரி செய்வது குறித்து கர்நாடக மாநில தலைமை செயலாளர் ஷாலினி ரஜ்னீஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், கர்நாடக பெரு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நகர வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
காரில் ஒருவர் மட்டும் பயணித்தால் வரி
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமை செயலாளர் ஷாலினி ரஜ்னீஷ், "போக்குவரத்து நெரிசலை குறைக்க நெரிசல் வரியை(Congestion Tax) அமுல்படுத்துவது குறித்து விவாதித்தோம். இதன்படி, பெங்களூரு ORR சாலைகளில் காரில் ஒருவர் மட்டும் பயணித்தால் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
இது மக்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிப்பதோடு, கார்களின் பயன்பாட்டை குறைப்பதால், போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. OOR மற்றும் அதிக போக்குவரத்து உள்ள சாலைகளில் இதனை அமுல்படுத்த திட்டமிட்டுளோம்"என தெரிவித்துள்ளார்.
வடக்கே ஹெப்பலில் இருந்து தெற்கே சில்க் ரோடு வரை நீண்டுள்ள இந்த OOR சாலையில், பல்வேறு முக்கிய நிறுவனங்கள் உள்ளதால், இந்த சாலை அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளில் ஒன்றாக உள்ளது.
மேலும், சாலை பள்ளங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை 90 நாட்களுக்குள் தீர்ப்பதாக இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |