ஜேர்மன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம ட்ரோன்: விமான சேவை பாதிப்பு
ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில், உக்ரைன் விமானம் ஒன்றினருகே மர்ம ட்ரோன் ஒன்று காணப்பட்டதால் பரபரப்பு
ஜேர்மனியின் Leipzig-Halle விமான நிலையத்தில், நேற்று நள்ளிரவு ட்ரோன்கள் ஏற்படுத்திய பரபரப்பால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
விமான நிலையத்தில் மர்ம ட்ரோன்
ஜேர்மனியின் Leipzig-Halle விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் முன்பகுதியில் ஏதோ மோதியதைத் தொடர்ந்து அந்த விமானம் Leipzig-Halle விமான நிலையத்தில் தரையிறங்காமல், Hanover விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

அது ஒரு சரக்கு விமானம். வானில் மர்மப் பொருள் ஒன்று தென்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் விமானம் ஒன்று உட்பட பல விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், விமான நிலையத்தில், ஓடுபாதை ஒன்றில் மர்மப் பொருள் ஒன்று கிடப்பது தெரியவரவே, வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் ரோபோ ஒன்று அங்கு செல்வதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதைத் தொடர்ந்து அங்கும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், Leipzig-Halle விமான நிலையம், ஜேர்மன் ராணுவம் மற்றும் நேட்டோ ராணுவத்துக்கான ராணுவ தளவாடங்கள் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் விமான நிலையம் ஆகும்.
அதுமட்டுமின்றி, உக்ரைனும் ரஷ்யாவும் மாறி மாறி ட்ரோன்கள் மூலம் தாக்கிக்கொள்ளும் சூழலில், அந்த விமான நிலையம், உக்ரைன் நாட்டின் Antonov ஏர்லைன்ஸ் விமானங்களின் தளமாகவும் செயல்படுவதாலேயே அங்கு ட்ரோன்கள் காணப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |