பிரான்ஸ் நாட்டு போர் கப்பலை நோக்கி வந்த ட்ரோன்: ஸ்வீடன் ராணுவம் வெளிப்படுத்திய சந்தேகம்
பிரான்ஸ் நாட்டின் போர் கப்பலை நோக்கி சந்தேகத்திற்குரிய ட்ரோன் ஒன்று பறந்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்வீடனில் நிலைநிறுத்தப்பட்ட பிரான்ஸ் போர்க்கப்பல்
உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கைக்கு நடுவே அண்டை நாடுகளின் வான் பரப்புகளையும் ரஷ்யா அத்துமீறுவதாக போலந்து, டென்மார்க் ஆகிய நேட்டோ உறுப்பு நாடுகள் அவ்வப்போது குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்வீடன் நாட்டின் மல்மோ துறைமுகத்தில் பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான விமான தாங்கி போர் கப்பலானது நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த பிரான்ஸ் நாட்டின் போர் கப்பலானது நேட்டோ உறுப்பு நாடுகளின் வழக்கமான போர் பயிற்சிக்காக ஸ்வீடனுக்கு வந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய டிரோன்
இந்நிலையில் மல்மோ துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த பிரான்ஸ் நாட்டு போர் கப்பலை நோக்கி சந்தேகத்திற்குரிய ட்ரோன் ஒன்று வருவதை ஒரேசுந்த் ஜலசந்தியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஸ்வீடன் ராணுவம் கண்டுபிடித்தது.
உடனடியாக அந்த டிரோனை சுட்டு வீழ்த்த தயாரான போது, அந்த ட்ரோன் திடீரென மாயமானது.
இதையடுத்து இந்த சந்தேகத்திற்குரிய டிரோனை ரஷ்யா ஏவி இருக்கலாம் என்று ஸ்வீடன் ராணுவம் சந்தேகம் எழுப்பியுள்ளது.
பால்டிக் கடலில் நிற்கும் ரஷ்ய போர் கப்பலில் இருந்து இந்த டிரோன் ஏவப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், இது குறித்து டென்மார்க் மற்றும் ஸ்வீடன் இணைந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |