யாரப்பா தேடுறீங்க? ஊரோடு சேர்ந்து தன்னை தானே தேடிய மதுபோதை ஆசாமி.. இறுதியில் நடந்தது என்ன?
துருக்கியில் ஒருவர் மது அருந்திவிட்டு தன்னை தானே யாரென்று தெரியாமல் நடுரோட்டில் தேடி அலைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
துருக்கியை சேர்ந்தவர் பாய்ஹன் முட்லு(50). இவர் நண்பர்களுடன் இணைந்து மது அருந்த சென்றுள்ளார். பின்னர் மது அருந்திவிட்டு அனைவரும் அங்கிருந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.
ஆனால் பாய்ஹன் முட்லு மட்டும் மதுபோதையில் வீட்டிற்கு செல்லாமல் அதே பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் அவருடன் சென்ற நண்பர்களை விசாரித்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் ஊர் முழுவதும் தேடி அலைந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு உதவும் வகையில் ஊர் மக்கள் சிலர் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு பாய்ஹன் முட்லுவும் அங்கே வந்துள்ளார். தன்னை தான் தேடுகின்றனர் என்று அறியாமல் யாரையோ தேடுகிறார்கள்.. நாமும் தேடுவோம் என்று அவரும் கூட்டத்தில் சேர்ந்து தேடியுள்ளார்.
இது தெரியாத அப்பகுதி மக்கள் பல மணி நேரம் தேடியுள்ளனர். ஒருக்கட்டத்தில் சோர்வு அடைந்த மக்கள் அவரின் பெயரை சத்தமாக சொல்லி அழைத்துள்ளனர்.
எல்லோரும் தன் பெயரை அழைப்பதை கண்டு தெளிவிக்கு வந்த பாய்ஹன் முட்லு நான் இங்கே தான் இருக்கிறேன் என்று கூட்டத்தில் இருந்து குரல் கொடுத்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் நடந்ததை புரிந்து கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.