கனடா முழுவதிலும் ஆயிரக்கணக்கான ஷாம்பூ தயாரிப்புகளில் புற்றுநோய் அபாயம்: கனடா சுகாதாரத்துறை எச்சரிக்கை
கனடாவில், பிரபல நிறுவனம் ஒன்றின் ஆயிரக்கணக்கான ஷாம்பூ தயாரிப்புகள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.
அதற்குக் காரணம், அந்த தயாரிப்புகளில் புற்றுநோயை உருவாக்கும் ஒரு ரசாயனம் இருப்பது தெரியவந்துள்ளதுதான்.
கனடா முழுவதிலும் ஆயிரக்கணக்கான Unilever நிறுவனத் தயாரிப்புகளான ஷாம்பூக்கள் திரும்பப் பெறப்பட்டுவருகின்றன.
அந்நிறுவனத்தின் Dove, Bed Head மற்றும் Tresemmé ஆகிய ஷாம்பூ தயாரிப்புகளில், பென்சீன் என்னும் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டதே அவை திரும்பப் பெறப்படுவதற்குக் காரணம் ஆகும்.
2020 ஜனவரிக்கும் 2022 அக்டோபருக்கும் இடையில் விற்பனை செய்யப்பட்ட இந்நிறுவன ஷாம்பூக்களை உடனடியாக திருப்பிக் கொடுக்குமாறு கனடா சுகாதாரத்துறை மக்களை வலியுறுத்துயுள்ளது.
Photo courtesy: Health Canada
இந்த ஷாம்பூக்களை வாங்கியவர்கள் அதைப் பயன்படுத்தவேண்டாம் என்றும், அந்த ஷாம்பூ போத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் அவற்றை குப்பையில் போட்டுவிடுமாறும் கனடா சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பிரச்சினை என்னவென்றால், ஷாம்பூவை ஷாம்பூ போத்தலிலிருந்து அழுத்தத்துடன் வெளியேற்ற பயன்படுத்தப்படும் வாயுவில்தான் இந்த பென்சீன் என்னும் ரசாயனம் அதிக அளவில் உள்ளதாம்.
இந்த பென்சீன் என்னும் ரசாயனத்தை சுவாசித்தாலோ, அல்லது வாய் அல்லது தோல் வழியாக அது உடலுக்குள் சென்றாலோ, இரத்தப் புற்றுநோய், எலும்பு மஜ்ஜை புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளை அது ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.