24 காரட் தங்கத்தில் நடைபாதை அமைக்கும் உலகின் முதல் நாடு
dubai to unveil wolrd first golden walkway in 2026 end: உலகின் முதல் தங்கத்திலான நடைபாதையை, துபாய் இந்த ஆண்டின் இறுதிக்குள் திறக்க உள்ளது.
தங்கத்தில் நடைபாதை அமைக்கும் துபாய்
துபாய் நீண்ட காலமாக தங்கத்திற்கான உலகளாவிய மையமாக இருந்து வருகிறது.

கடந்த ஜனவரியில், துபாயின் தெய்ரா பகுதியில் தங்க மாவட்டம் திறக்கப்பட்டது.
இங்கு ஏற்கனவே, தங்கம், நகைகள், வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாழ்க்கை முறை பிரிவுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இங்கு 24 காரட் தங்கத்தில் உலகின் முதல் மற்றும் நீளமான தங்க நடைபாதையை இந்த ஆண்டின் இறுதிக்குள் திறக்க உள்ளதாக துபாய் தங்க மாவட்டத்தின் வர்த்தகத் துறையின் மூத்த இயக்குநர் ரஷீத் அல் ஹர்மூதி தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம், பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதோடு, தங்க வர்த்தகம் மற்றும் சுற்றுலாவிற்கான உலகளாவிய மையமாக துபாயின் நிலையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய கிழக்கிலேயே மிகப்பெரியதாக அமையும் நோக்குடன், ஒரு தங்கம் மற்றும் ஆபரண வர்த்தகக் கண்காட்சியை நடத்தவும் இந்த மாவட்டம் திட்டமிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, இந்த மாவட்டத்தில் செயல்படத் தொடங்கிய மொத்த தங்க வர்த்தக அலுவலகங்களின் எண்ணிக்கை 20 சதவீதமும், தங்கம், நகைகள், விலையுயர்ந்த கற்கள் மற்றும் ஆடம்பர கைக்கடிகாரங்களை விற்கும் புதிய கடைகளின் எண்ணிக்கை 15 சதவீதமும் அதிகரித்துள்ளது.
சாமானியர்கள் பலருக்கும் ஒரு கிராம் தங்கம் வாங்கவே தவிக்கும் நிலையில், தங்கத்திலான நடைபாதையை உருவாக்கும் துபாயை உலக நாடுகள் வியந்து பார்க்கின்றன.