இந்திய நடிகர் வீட்டுக்குள் நுழைந்த வெளிநாட்டுப்பெண் கைது
வெளிநாட்டுப்பெண்ணொருவர் இந்திய நடிகர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து அவருடன் தங்கவிரும்புவதாக கூறியதால் பரபரப்பு உருவானது.
நடிகர் வீட்டுக்குள் நுழைந்த பெண்
நேற்று மாலை 6.00 மணியளவில், மும்பையிலுள்ள நடிகர் ஆதித்யா ராய் கபூர் வீட்டுக்கு ஒரு பெண் வந்துள்ளார்.
கபூர் வீட்டில் வேலை செய்யும் சுனிதா பவார் என்னும் பெண்ணை சந்தித்த அந்தப் பெண், தான் கபூருக்கு சில உடைகளும் பரிசுகளும் கொண்டுவந்துள்ளதாக கூற, சுனிதா அவரை வீட்டுக்குள் அமரவைத்திருக்கிறார்.
சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த கபூர், தன் வீட்டுக்குள் ஒரு பெண் உட்கார்ந்திருப்பதைக் கண்டு என்ன விடயம் என விசாரிக்க, கபூருக்கு மிகவும் அருகே சென்றுள்ளார் அந்தப் பெண்.
உடனே கபூர் வீட்டில் வேலை செய்யும் சுனிதா கபூரை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டு, உதவியாளர்களை அழைக்க, பொலிசார் அங்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
விசாரணையில், அந்தப் பெண்ணின் பெயர் கஜாலா சக்கரியா சித்திக்கி (47) என்பதும், அவர் துபாயில் வாழ்ந்துவருபவர் என்பதும் தெரியவந்தது.
தான் கபூரின் ரசிகை என்றும், தான் அவருடன் தங்க விரும்பியதால் அவரது வீட்டுக்குச் சென்றதாகவும் கூறியுள்ளார் அந்தப் பெண்.
கபூர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதேபோல, பிரபல நடிகர் சைஃப் அலி கான் வீட்டுக்குள் ஒரு நபர் நுழைந்து அவரை கத்தியால் குத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை உருவாக்கிய நிலையில், சமீபத்தில் சல்மான் கான் வீட்டுக்குள் நுழைந்த இருவர், தற்போது கபூர் வீட்டுக்குள் நுழைந்த இந்த பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |