ஆப்கானில் கொடூரம்! உணவு பற்றாக்குறையால் இளம்பெண்களை விற்கும் பெற்றோர்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்
ஆப்கானில் உணவு பற்றாக்குறையால் பெற்ற பிள்ளைகளை விற்கும் அவல நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை 20 வருடங்கள் கழித்து தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில் அங்கு வசிக்கும் பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
அமைச்சரவை பதவிகளிலும் பெண்கள் இல்லை, பெண்கள் கல்வி கற்க கூடாது, வேலைவாய்ப்பில் உரிமைகள் எதுவும் வழங்கப்படாதது என்ற அறிவிப்பை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
அதுபோல தவறு செய்பவர்களுக்கு கண்மூடித்தனமாக தண்டனைகள் தரப்பட்டு வருகின்றன. அந்த தண்டனைகளை பார்த்து மக்கள் உச்சகட்ட பயத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அந்த நாடு முழுவதும் வறுமையில் சிக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானின் 39 மில்லியன் மக்களில் பாதிக்கு மேல் கடுமையான உணவு பற்றாக்குறையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.
அதே சமயம் பொருளாதாரமும் வேகமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆப்கன் மக்கள் வேலையில்லாமலும், உணவு இல்லாமலும் அவதிப்பட்டு கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்.
இந்த சூழலில் அங்குள்ள இளம்பெண்களை குடும்பத்தினர் விற்று வருகிறார்களாம். ஹெராட், பட்கிஸ் போன்ற பகுதிகளில் உணவுக்கு வழியில்லாமல் பெற்றோர் தங்களது இளம் மகள்களை திருமணத்துக்காக விற்பனை செய்ய வேண்டிய அவல நிலைக்கு ஆளாகி உள்ளனர்.