நெதர்லாந்து பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: பெண் பராமரிப்பு ஊழியருக்கு நேர்ந்த சோகம்
Dutch Safari Park Leopard Attack woman Keeper dead: நெதர்லாந்தில் சிறுத்தை தாக்கியதில் உயிரியல் பூங்காவில் பணிபுரிந்த பெண் ஊழியர் உயிரிழந்துள்ளார்.
பெண் உயிரியல் பூங்கா ஊழியர் உயிரிழப்பு
தெற்கு நெதர்லாந்தின் பீக்ஸ் பெர்கன்(Beekse Bergen) சஃபாரி பூங்காவில் சிறுத்தை தாக்கியதில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பூங்காவில் பணியாற்றி வந்த மூத்த பெண் பராமரிப்பு ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை இந்த வழக்கமான பராமரிப்பு பணியில் அந்த பெண் ஊழியர் ஈடுபட்டு கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

உயிரிழந்த பெண் ஊழியர் இரண்டு பாரசீக வகை சிறுத்தைகளை பராமரித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று நிலவிய மோசமான வானிலை காரணமாக சிறுத்தைகளை வெளிப்புற கூண்டில் இருந்து உட்புற கூண்டிற்கு மாற்றும் வேலையில் அந்த பெண் ஊழியர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
எப்போது விலங்குகளுடன் நேருக்கு நேர் அணுக முடியாதவாறு தனித்தே இந்த நடைமுறைகள் பின்பற்றப்படும் நிலையில், அன்று எதிர்பாராத விதமாக பெண் ஊழியர் சிறுத்தையை நேருக்கு நேர் மோதும் சூழலை எதிர்கொண்டுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் சிசிடிவி பொறுத்தப்படாததால் துல்லியமாக அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் சிறுத்தை தாக்கி பலத்த காயமடைந்து இருந்த போதிலும் தன்னிடம் இருந்த வாக்கி டாக்கி மூலம் சக ஊழியர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார்.

சிறுத்தை தாக்கிய சம்பவத்தில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயமடைந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இருப்பினும் சில நாட்களுக்கு பின்பு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனை பூங்கா நிர்வாகம் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் பாதுகாப்பு விதிமீறல் ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்பதை கண்டறிய சுயாதீன விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.