E- Learning என்பது என்ன?
மின்னணு சாதனங்களின் வழியாக கற்றுக்கொள்வதையே E- Learning என குறிப்பிடுகிறோம்.
அதாவது E- Learning என்பது வகுப்பறைக்கு வெளியே கற்றுக்கொடுப்பதை, கணனி - இணைய உதவியுடன் கற்றுக்கொள்வதை குறிக்கிறது.
ஒரே நேரத்தில் அதிகளவான நபர்கள் E- Learning மூலம் பாடத்தை கற்றுக்கொள்ளலாம், ஆசிரியர் ஒருவரிடமிருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் கற்றுக்கொள்ள இலகுவான சூழலை E- Learning ஏற்படுத்திக் கொடுக்கிறது.
தொடக்க காலத்தில் இதை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக E- Learning அவசியமான மற்றும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது எனலாம்.
படத்தை பார்த்து, வீடியோக்கள் மூலமாக கற்றுக்கொள்ளும் போது மிக எளிதாக புரிந்துவிடும், மிக உன்னிப்பாக கவனிப்பதால் பார்த்து தெரிந்து கொள்வதால் மூளையில் மிக எளிதாகவும் பதிந்துவிடும்.
இணையதளத்தின் பயன்பாட்டுடன் ஸ்மார்ட்போன்கள், டேப்லட்டுகள் வழியே 24 மணிநேரமும் நாம் கற்றுக்கொள்ளலாம், உலகின் எந்தவொரு மூலையில் இருந்து இணையத்தை பயன்படுத்துவது இலகுவான ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.
இதன்காரணமாகவே தற்போதைய உலகில் E- Learning மூலமாக கற்றுக்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
ஓன்லைன் வகுப்புகளில் பங்கேற்றுக்கொண்டிருக்கும் போதே, “raise their hands”என்ற ஓப்ஷன் மூலமாக பங்கேற்றுக் கொள்ளலாம்.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வகுப்புகள் மூலம் எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம், புரியாத விடயங்களை மறுபடியும் Rewind செய்துகூட பார்க்கும் வசதியும் இருக்கிறது.
மாணவர்கள் குழுவாக இணைந்து தங்களது கருத்துகளை மற்றவர்களுடன் பகிரவும், கலந்து ஆலோசிக்கவும் முடியும்.
தங்களது பணியை கவனித்துக்கொண்டே புதிதாக ஒரு விடயத்தை தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் கற்றுக்கொள்ளலாம்.
மிக முக்கியமாக தகவல்தொழில்நுட்ப உலகில் நிர்வாகத்தினர் தங்களது ஊழியர்கள் புதிய அம்சத்தை கற்றுக்கொள்ள E- Learning யை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
E Learning எதற்காக?
மாணவர்கள் தங்களுக்கு ஏற்ற நேரத்தில், தங்களது வேகத்துக்கு ஏற்றவாறு கற்றுக்கொள்ளலாம், விரிவாக சொல்லப்போனால் ஒரு விடயத்தை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை தங்களுக்கு தெளிவாக புரியும் வரை கற்றுக்கொள்ளலாம்.
ஓன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களை தக்கவைத்துக் கொள்ளும் விகிதம் அதிகரிகத்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன, அதாவது மாணவர்கள் தக்கவைப்பு விகிதம் 25 முதல் 60 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
மிக முக்கியமாக நேர மேலாண்மை, நேரடியாக வகுப்புகளில் சேர்ந்தும் செல்ல இயலாத சூழல் ஏற்படலாம், இதனால் பணமும், நேரமும் மட்டுமே வீணாகும். ஆனால் ஓன்லைன் வகுப்புகளில் சேர்ந்து கொண்டால் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்.
தீமைகளும் உண்டோ?
E Learning மூலம் கற்பதில் பல நன்மைகள் இருந்தாலும் முகத்தை பார்த்து நேரடியாக கற்றுக்கொள்ள முடியாமல் போகிறது, அறிவியல் ஆய்வகங்களை பயன்படுத்த முடியாது.
சில நேரங்களில் இணையத்தொடர்பு துண்டிக்கப்பட்டால் அந்நேரத்திற்கான ஈடுபாடு குறைந்து போகலாம்.
நீங்களே உங்களை சுயமாக ஊக்கம் அளித்துக்கொள்ள வேண்டும், நேரடி கற்றல் மூலம் ஆசிரியரின் ஊக்கமும் இணைந்து கொண்டு உங்களை சீர்ப்படுத்தும்.
முடிவாக...
பள்ளி மற்றும் கல்லூரிகளில் புத்தகங்கள் வாயிலாக கற்பது எவ்வளவு அவசியமான ஒன்றோ, அதேசமயம் E- Learning என்பதை தவிர்க்க முடியாத சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே மறுக்க முடியாத உண்மை.