வேகமாக சுற்ற தொடங்கும் பூமி; ஜூலை மாதத்தில் நடைபெற உள்ள மாற்றம் - என்ன காரணம்?
பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்துள்ளதால், நாளின் நேரத்தில் மாற்றம் ஏற்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.
பூமியின் சுழற்சி வேகம் அதிகரிப்பு
பூமியானது தன்னை தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் அதாவது 86,400 வினாடிகள் எடுத்துக்கொள்வதால் அது ஒரு நாள் என கணக்கிடப்படுகிறது.
தற்போது பூமி சுற்றும் வேகம் அதிகரித்து வருவதால், நாள் கணக்கில் வினாடிகள் குறையும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 9 ஆம் திகதி, பூமி வேகமாக சுற்றிய நாளாக கருதப்படுகிறது. மேலும், வரும் ஜூலை 9, ஜூலை 22 அல்லது ஆகஸ்ட் 5 ஆகிய தேதிகளில் நாளின் மொத்த நேரத்தில் 1.30, 1.38, 1.51 மில்லி வினாடிகள் குறையும் என கூறப்படுகிறது.
ஒரு மில்லி வினாடி என்பது 0.001 வினாடி ஆகும். இந்த நேர குறைவை மனிதர்கள் உணர முடியாவிட்டாலும், அணு கடிகாரம், செயற்கைக்கோள் அமைப்பு, ஜி.பி.எஸ் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
என்ன காரணம்?
பூமிக்கு மிக அருகே சந்திரன் வருவதே இந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்க கூடும் என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
மேலும், பனிக்கட்டி உருகுதல், பெரியளவிலான பூகம்பங்கள், கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவையும் பூமியின் சுழற்சி வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்தக் காரணிகள் பூமியை சற்று வேகமாகவோ அல்லது மெதுவாகவோ சுற்றச் செய்து, ஒரு நாளின் நீளத்தை சில மில்லி விநாடிகள் மாற்றக்கூடும்.
பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பூமிக்கு மிக நெருக்கமாக இருந்ததால், ஒரு நாள் சுமார் 19 மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது.
காலப்போக்கில், சந்திரன் பூமியில் இருந்து வெகுதூரம் நகர்ந்ததால், பூமியின் சுழற்சி மெதுவாகி, படிப்படியாக ஒரு நாளின் நீளம் அதிகரித்தது.
இந்த வேகம் தொடர்ந்து நீடித்தால், 2029 ஆம் ஆண்டில், ஒரு நாளில் லீப் வினாடியை குறைக்க நேரிடும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |