இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர்
இந்தியாவை ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனியின் உரிமையாளராக தற்போது இந்தியர் ஒருவர் உள்ளார்.
கிழக்கிந்திய கம்பெனி
பிரித்தானிய அரசு ஒரு சிறப்பு சாசனத்தின் கீழ், டிசம்பர் 31, 1600 அன்று, பிரித்தானியாவில் ஒரு வர்த்தக நிறுவனமாக கிழக்கிந்திய கம்பெனியை(East India Company) உருவாக்கியது.
1607 ஆம் ஆண்டில், EIC நிறுவனத்தின் ஹெக்டர் கப்பல்,16000 கி.மீ மேல் பயணம் செய்து, இந்தியா வந்தடைந்து, 1607 ஆம் ஆண்டு வணிகம் செய்வதாக கூறி, கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்குள் நுழைந்து.
சூரத், கொல்கத்தா, மும்பை, சென்னை என நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைத்து, தனது ஆதிக்கத்தை செலுத்தியது.
அன்றைய ஆட்சியாளர்களை வீழ்த்தி, இந்தியாவை தனது ஆளுகைக்குள் கொண்டு வந்த கிழக்கிந்திய கம்பெனி, 1857 வரை இந்தியாவை ஆட்சி செய்தது. 1858 ஆம் ஆண்டு, ஆட்சி அதிகாரம் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரித்தானிய அரசிற்கு மாற்றப்பட்டது.
1874 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி கலைக்கப்பட்டது. இருப்பினும், அதன் ஒரு சிறிய பகுதி அதன் வர்த்தகப் பெயரையும், ஒரு சிறிய தேநீர் மற்றும் காபி நிறுவனத்தையும் மட்டும் கொண்டிருந்தது.
இந்திய உரிமையாளர்
இந்நிலையில், 2005 ஆம் ஆண்டில், அதன் 30 முதல் 40 பங்குதாரர்களிடமிருந்து, கிழக்கிந்திய கம்பெனியை, மும்பையில் பிறந்த தொழிலதிபர் சஞ்சீவ் மேத்தா (Sanjiv Mehta) வாங்கினார்.
லண்டனில் உள்ளமேஃபேர் பகுதியில், சுமார் 2,200 சதுர அடி பரப்பளவில், கிழக்கிந்திய கம்பெனியின் கடையை திறந்தார். இங்கு, உலகம் முழுவதிலுமிருந்து அந்த நிறுவனம் உருவாக்கிய 100 வகையான தேநீர், சாக்லேட்டுகள், மசாலாப் பொருட்கள் மற்றும் கடுகுகள் உட்பட 350 ஆடம்பரப் பொருட்கள் உள்ளன.
மேலும், இந்நிறுவனம் வரலாற்று நாணயங்களை அச்சிட்டு விற்பனை செய்கிறது. பழைய கிழக்கிந்திய நிறுவனத்தின் முத்திரையுடன் வர்த்தகம் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில், இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா மற்றும் லூலூ நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |