நாளை உலகம் அழியுமா? சொத்துக்களை விற்று பணத்தை வழங்கும் மக்கள்
நாளை முதல் உலகம் அழியும் என ஒருவர் கூறியுள்ள நிலையில், மக்கள் சொத்துக்களை விற்று அவரிடம் பணத்தை வழங்கி வருகின்றனர்.
உலகம் அழிய போகிறது என்ற கணிப்பை அவ்வப்போது மத அறிஞர்கள் உள்ளிட்ட பலரும் கூறி வந்தாலும் தற்போது வரை அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில் ,கானாவை சேர்ந்த தன்னை தானே கடவுளின் அவதாரமாக அறிவித்துள்ள எபோ நோவா என்பவர், நாளை உலகம் அழியும் என தெரிவித்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்துமஸ் முதல் உலகம் அழியும்
ஆப்பிரிக்கா நாடான கானாவை சேர்ந்த எபோ நோவா(Eboh Noah), தன்னை தானே தீர்க்கதரிசியாக அறிவித்துக்கொண்டார்.

கிழிந்த சாக்கு ஒன்றை உடையாக உடுத்திக்கொண்டு, கையில் புத்தகம் ஒன்றை வைத்துக்கொண்டு வீடியோ வெளியிடும் இவரை சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் முதல் 3 ஆண்டுகளுக்கு விடாமல் பெரும் மழை பெய்யும் என்றும், இதில் உலகம் முழுவதும் மூழ்கி, மனிதர்கள் உட்பட உலகில் உள்ள அனைத்து உயிர்களும் அழிந்து விடும்" என கூறியுள்ளார்.
இந்த பேரழிவில் இருந்து யாரேனும் தப்பிக்க வேண்டுமென்றால், அவர்கள் தன்னுடைய பேழையில் ஏற வேண்டும். இதற்காக 10 பேழைகளை உருவாக்குமாறு கடவுள் தனக்கு கட்டளையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சொத்துக்களை விற்கும் மக்கள் இதற்காக, 2.50 லட்சம் டொலர் மதிப்புள்ள மரங்களை வாங்கியுள்ளதாகவும், ஒவ்வொரு பேழையிலும் 3000 பேர் அமரலாம் எனவும், கோடிக்கணக்கானோர் தங்கும் பிரமாண்ட பேழை ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பேழைகளை கட்டுவதை அவர் ஆய்வு செய்வது போல் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
பலரும் இவரது கருத்தை நிராகரித்தாலும், இவரை பின்தொடரும் சிலர் உலகம் அழியும் என்ற அச்சத்தில் தங்களது வீடு உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் விற்று பேழையில் இடம் பெற இவரிடம் பணத்தை வழங்கி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |