இடைத்தேர்தல் திகதியை அறிவித்த தேர்தல் ஆணையம் - தமிழ்நாட்டிற்கு எப்போது?
வடமாநிலங்களுக்கு இடைத்தேர்தல் திகதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் எப்போது இடைத்தேர்தல் என கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் எப்போது?
பீகாரின் பங்கிபூர், மத்தியபிரதேசத்தின் தாட்டியா, குஜராத்தின் மஞ்சள்பூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் வரும் 30ஆம் திகதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதேவேளையில், தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம், பெருந்துறை தாராபுரம் ஆகிய 6 தொகுதிகள் என மொத்தம் 7 தொகுதிகள் காலி தொகுதிகளாக உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ யோகேஷ் படேல், கடந்த ஜூன் 2 ஆம் திகதி காலமான பின்னர் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு உள்ளிட்ட சில சட்டமன்ற தொகுதிகள் அதற்கு முன்னதாகவே காலியிடமாக அறிவிக்கப்பட்டும் அங்கு ஏன் தேர்தல் அறிவிக்கப்படவில்லை என கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அரசியலமைப்பின் படி, ஒரு சட்டமன்ற/நாடாளுமன்ற தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டால் அங்கு 6 மாதத்திற்குள்ளாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், உறுப்பினரின் பதவிக்காலம் முடிவதற்கு ஓராண்டிற்கு குறைவான காலம் இருந்தால் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை.

மேலும், அதிமுக எம்.எல்.ஏக்கள் முதல்வர் விஜய்யின் குதிரைபேரத்தால் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர் என குற்றச்சாட்டியுள்ள அதிமுக எம்.பி இன்பதுரை, அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |