2022ஆம் ஆண்டில் புலம்பெயர்வோரை கனடாவுக்கு கொண்டு வருவதற்காக அரசு வைத்துள்ள மாபெரும் திட்டம்
கனேடிய நிதியமைச்சரான Chrystia Freeland, நேற்று (டிசம்பர் 14) மாலை, கனேடிய அரசின் நிதி நிலைமை அறிக்கையை (Economic and Fiscal Update) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கை, ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான பெடரல் பட்ஜெட்டுக்குப் பின் அரசால் வெளியிடப்படும் முதல் பொருளாதார முன்னறிவிப்பின் முதல் திருப்புதலாகும்.
இவ்வகை அறிவிப்புகள், கனேடிய அரசு, எவ்வகையில் பணத்தை செலவு செய்யப்போகிறது என்பது குறித்த விடயத்தை மக்களுக்கு தெரியப்படுத்துகின்றன.
உதாரணமாக, குழந்தைகள் நலனுக்காக அதிகம் செலவு செய்வது குறித்து கடந்த ஆண்டின் நிதி நிலைமை அறிக்கையில் தெரிவித்த அரசு, இளவேனிற்காலத்தில் குழந்தைகளின் பகல் நேரக் காப்பாகங்களுக்காக நாளொன்றிற்கு 10 டொலர் உதவி வழங்கும் திட்டத்தை அறிவித்தது நினைவிருக்கலாம்.
இந்த நிதி நிலை அறிக்கைகளும், பட்ஜெட்டும், பொதுவாக, கனடாவுக்கு புதிதாக வருபவர்கள் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் செயல் திட்டங்களைக் கொண்டிருக்கும். அவை, பணி உருவாக்கம், மருத்துவ வசதி, கல்வி, உள்கட்டமைப்பு, குழந்தைகள் நலன் மற்றும், புலம்பெயர்ந்தோர் உட்பட கனடாவில் வாழும் அனைவர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கும். சில நேரங்களில் புலம்பெயர்தலுக்கென்றே வடிவமைக்கப்பட்டவையாகவும் அவை இருக்கும். இதற்கு உதாரணமாக 2021ஆம் ஆண்டின் பட்ஜெட்டைக் கூறலாம்.
கனேடிய நிதியமைச்சரான Chrystia Freeland தனது உரையில், கனடா, கொரோனா காலகட்டத்திலிருந்து பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மீள்வதற்காக அரசு தொடரும் கொள்கை சார் நடவடிக்கைகள் குறித்த விடயங்களை அறிவித்தார். புலம்பெயர்தல், பொருளாதார வளர்ச்சியையும், உலக நாடுகளுடன் போட்டியிடும் கனடாவின் திறனையும்(Canadian competitive advantage) தூண்டும் மற்றொரு உந்துசக்தியாகும் என்றார் அவர்.
2022ஆம் ஆண்டில், 411,000 புலம்பெயர்வோரை கனடாவுக்கு கொண்டு வர அரசு உறுதியேற்றுள்ளது என்று கூறிய அவர், அது கனேடிய வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையாகும் என்றார்.
இந்த முயற்சிக்கு உதவுவதற்காகவும், நிரந்தர மற்றும் தற்காலிக வாழிட உரிமங்கள் மற்றும் குடியுரிமை கோரும் விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான காலகட்டத்தை குறைப்பதற்காகவும், நாம் 85 மில்லியன் டொலர்களை புலம்பெயர்தல் அமைப்பில் முதலீடு செய்கிறோம் என்றார் Freeland.
அவர் கூறியுள்ள இந்த விடயம், கனடா அரசு, 2021-2023க்கான புலம்பெயர்தல் மட்ட திட்டம் குறித்து எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறது என்பதை அழுத்தந்திருத்தமாக வெளிப்படுத்துவதாக காணப்படுகிறது.
2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டிலும், புலம்பெயர்தல் தொடர்பான ஐந்து முக்கிய வாக்குறுதிகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றில் தற்காலிக வாழிட உரிமத்திலிருந்து நிரந்தர வாழிட உரிமத்துக்கு மாறுவதற்கான வழிமுறை ((TR to PR pathway) தொடர்பான விடயத்துக்காக நிதியுதவி செய்வது போன்ற வாக்குறுதிகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டன.
அத்துடன், 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், பழமையாகிப்போன Global Case Management System (GCMS) என்ற திட்டத்துக்கு பதில் புதிய துட்டம் ஒன்றைக் கொண்டு வருவது, எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்வது, தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்திற்காக அதிக நிதி செலவிடுவது, புதிதாக கனடாவுக்கு வரும் பெண்களுக்கான வேலைவாய்பு தொடர்பில் கூடுதல் நிதி செலவிடுவது குறித்த திட்டங்களும் அடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.