அவர் எப்படி பேசினார் பார்த்தீங்க தானே... இவ்ளோ கீழ்த்தரமாக பேசலாமா? பிரச்சாரத்தில் கண்கலங்கிய எடப்பாடி
தமிழக முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் பரப்புரையின் போது கண்கலங்கிய படி பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
திமுக எம்.பியும் துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசியது விமர்சனத்துக்கு உள்ளானது.
இதுகுறித்து, அ.தி.மு.க சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது ஆபாசமாக திட்டுதல், தேர்தல் நடத்தை விதிமீறல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சென்னை திருவொற்றியூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.குப்பனுக்கு வாக்கு சேகரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் தன்னுடைய தாய் குறித்து ஆ.ராசா பேசியது குறித்து கண்கலங்கினார். அதில், என் தாயைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக பேசியிருக்கிறார். குடும்பத்தில் ஒரு தாயாக பார்க்க வேண்டும். முதலமைச்சருக்கே இந்த நிலைமை என்றால், மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்கள்.
இவர்கள் ஆட்சிக்கு வந்தால், தாய்மார்கள் நிலைமை என்னவாகும் என்று எண்ணிப் பாருங்கள். எனக்காக பரிந்து பேசவில்லை. ஒவ்வொருவரும் தாய்க்கு பிறந்தவர்கள்
தாய்மார்களை கொச்சைப்படுத்தி பேசுவது, இழிவுபடுத்தி பேசுபவர்களுக்கு தக்க தண்டனைய வழங்க வேண்டும். என்னுடைய தாய் கிராமத்தில் பிறந்தவர், விவசாயி, இரவு பகல் பாராமல் பாடுபடுபவர், அவர் இறந்துவிட்டார் அவரை பற்றி இழிவாக தரக்குறைவாக எப்படி எல்லாம் பேசினார்.
முதலமைச்சருக்கே இந்த நிலைமை. நான் நினைத்தால் சாதிக்க முடியும். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்த வளர்ந்தவன். ஏழையாக இருந்தாலும் பணக்கார்ராக இருந்தாலும் தாய்தான் உயர்ந்த ஸ்தானம்.
ஒரு சாமானியன் முதல்வராக வந்தால் எவ்வளவு பேச்சுக்களை வாங்க வேண்டியிருக்கிறது. என்னையே இப்படி பேசும் இவர்கள் நாளை தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் நிலைமை, தாய்மார்கள் நிலைமை என்னவாகும்.
இங்கு இதைப்பேச வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. தாய்மார்கள் இருந்ததால் பேசிவிட்டேன். யார் பெண் குலத்தை இழிவாக பேசினாலும், தாயை இழிவாக பேசினாலும் ஆண்டவன் நிச்சயமாக அதற்குரிய தண்டனையை கொடுப்பார் என்று கூறினார்.

