ஸ்காட்லாந்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்: சட்டை அணியாத 36 வயது இளைஞர் கைது
ஸ்காட்லாந்தின் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவத்தில் 36 வயது நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் வன்முறை
வெள்ளிக்கிழமை ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் இஸ்லாமியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வன்முறை சம்பவத்தில் 36 வயது நபர் மீது அதிகாரிகள் அதிகாரப்பூர்வ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் அருகே நடந்துள்ளது.
இதில் 5 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை. இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் வெளியான வீடியோ காட்சிகளில் சட்டை அணியாத நபர் ஒருவர் பெரிய ஆயுதத்துடன் சுற்றித் திரிவது பதிவாகியுள்ளது.
இறுதியில் லீத் வாக் பகுதியில் வைத்து சந்தேக நபரை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பாக பொது வழக்கறிஞரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டு இருப்பதாகவும், சந்தேக நபர் விசாரணைக்காக விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார் என்றும் ஸ்காட்லாந்து பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |