பல லட்சம் டன் கோதுமை ஒப்பந்தம் ரத்து: உக்ரைனுக்கு எதிராக எகிப்து எடுத்துள்ள அதிரடி முடிவு
உக்ரைனிடம் இருந்து 240,000 டன்கள் கோதுமையை இறக்குமதி செய்வது தொடர்பான ஒப்பந்தங்களை எகிப்து அரசாங்கம் ரத்து செய்து இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
உலகின் கோதுமை உற்பத்தி ஏற்றுமதியில் முக்கிய நாடுகளாக விளங்கும் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் நடவடிக்கையால், உலக அரங்கில் உணவு தானியங்களின் தட்டுப்பாடு பெரும் அளவு அதிகரித்துள்ளது.
மேலும் சமீபத்தில் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருந்த உக்ரைனிய தானியங்களை கருங்கடல் துறைமுகங்கள் வாயிலாக வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களையும் ரஷ்ய ராணுவம் மீறி உக்ரைனிய துறைமுகங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்தநிலையில், சுமார் 2,40,000 டன் உக்ரைனிய கோதுமைகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை எகிப்து அரசாங்கம் ரத்து செய்து இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த சரக்குகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் டெலிவரிக்காக முன்பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் போர் காரணமாக அவை அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.