தாய்லாந்தை உலுக்கிய சம்பவம்... 9 பேர்கள் ஆபத்தான நிலையில்: 8 பேர் பலி
பேங்காக் அருகே பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், மாணவர் ஒருவர் தனது தாத்தா-பாட்டியை கொன்றுள்ளார்.
தாய்லாந்தைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞர் ஒருவர் தனது தாத்தா-பாட்டியை கொன்ற பிறகு, தனது பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஐந்து பேரைக் கொன்று, தானும் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
ஆபத்தான நிலையில்
துப்பாக்கி வன்முறையைக் கையாள்வதில் திணறிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டை உலுக்கியுள்ள இன்னொரு தாக்குதல் சம்பவம் இது என்றே கூறுகின்றனர்.

பேங்காக் நகருக்கு வடமேற்கே அமைந்துள்ள புகழ்பெற்ற டெப்சிரின் நோந்தபுரி பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 14 வயதுடைய அந்த மாணவர் 30-க்கும் மேற்பட்டோரைப் காயப்படுத்தியுள்ளார்.
இதில், ஒன்பது பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தாய்லாந்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.
தாக்குதலில் ஈடுபட்ட அந்த மாணவர் தனது தாத்தாவிற்குச் சொந்தமான துப்பாக்கியைக் கொண்டு குறைந்தது 26 முறை சுட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவ்க்கப்பட்டுள்ளது; அவரிடம் மேலும் 34 தோட்டாக்கள் எஞ்சியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, மாணவர்கள் வெறும் காலுறைகளுடன் ஓடும் காட்சிகள் அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களில் பதிவாகியிருந்தன.
இதனிடையே, புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களைச் செயல்படுத்தப்போவதாக நாட்டின் தலைவர் உறுதியளித்த நிலையில், மதிய வேளையில், வழக்கமாக மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் விளையாட்டு மைதானம் அதிகாரிகள் மற்றும் ஊடகத்தினரால் நிறைந்திருந்தது.
உலகளவில் 13-வது இடம்
தென்கிழக்கு ஆசியாவிலேயே தாய்லாந்தில்தான் பொதுமக்களிடையே துப்பாக்கி வைத்திருக்கும் விகிதம் மிக அதிகமாக உள்ளது.
மேலும், 2017-ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட 'ஸ்மால் ஆர்ம்ஸ் சர்வே' என்ற அமைப்பு, சிறு ரக துப்பாக்கிகளை வைத்திருப்பதில் தாய்லாந்தை உலகளவில் 13-வது இடத்தில் தரவரிசைப்படுத்தியது.

சமீபத்திய வருடங்களில் தாய்லாந்தில் பாடசாலைகள் மற்றும் பாங்காக்கில் உள்ள ஒரு பெரிய வணிக வளாகம் ஆகியவற்றில் நடந்த சம்பவங்கள் உட்பட பல துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன;
இதில் 2022-ஆம் வருடம் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 22 சிறார்கள் உட்பட 37 பேர் கொல்லப்பட்ட சம்பவமும் அடங்கும்.
தாக்குதல் நடந்த இப்பாடசாலையானது, தாய்லாந்து அரச குடும்பத்தால் நிறுவப்பட்ட 'டெப்சிரின்' (Debsirin) கல்விக் குழுமத்தின் ஒரு பகுதியாகும். இதன் முன்னாள் மாணவர்களில் பிரதமர்கள், அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோர் அடங்குவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |