இசை நிகழ்ச்சிக்கு ஆர்வமாக சென்றவர்கள் சடலமாக திரும்பிய துயரம்: அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி
அமெரிக்காவின் ஹூஸ்டனில் ஆஸ்ட்ரோவொர்ல்ட் இசை விழாவிற்கு சென்றவர்களில் நெரிசலில் சிக்கி 8 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி சுமார் 9 மணியளவில் குறித்த ஆஸ்ட்ரோவொர்ல்ட் இசை விழா துவங்கியுள்ளது. இதில் சுமார் 50,000 மக்கள் கலந்து கொண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
கட்டுக்கடங்காத கூட்டம் முன்னோக்கி நகர, திடீரென்று நெரிசல் ஏற்பட்டு பலர் காயமடைய காரணமாக அமைந்துள்ளது. இதனையடுத்து பாடகர் Travis Scott முன்னெடுத்து வந்த அந்த இசை நிகழ்ச்சியானது நிறுத்தப்பட்டது.
இச்சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக 17 பேர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும், அதில் 11 பேர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்ததும் மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, காயமடைந்த பலருக்கு, சம்பவம் நடந்த இடத்தில் வைத்தே மருத்துவ உதவிகளும் அளிக்கப்பட்டுள்ளது. இசை விழா நடந்த பகுதியில் உடனடியாக மருத்துவமனை ஒன்றை ஏற்படுத்து, சுமார் 300 பேர்களுக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்ட்ரோவொர்ல்ட் இசை விழாவானது வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இச்சம்பவத்தை அடுத்து சனிக்கிழமைக்கான இசை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இசை விழாவை முன்னிட்டு அருகாமையிலேயே மருத்துவ உதவிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கூட்ட நெரிசலில் சிக்கி பல எண்ணிக்கையிலானோர் காயமடைய, இறுதியில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் சூழல் உருவானதாக கூறப்படுகிறது.