நெதன்யாகுவின் இனவெறி பிரச்சாரம்... கடுமையாகச் சாடிய ஐசென்கோட்
Eisenkot slams Netanyahu’s racist campaign: நெதன்யாகுவின் இனவெறிப் பிரச்சாரத்தை ஐசென்கோட் கடுமையாகச் சாடியுள்ளார்.
தேர்தல்களின் போது, இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனிய குடிமக்களுக்கு எதிராக இனவெறி மற்றும் வன்முறை சார்ந்த பிரச்சாரத்தைத் தூண்டியதாக, இடைக்காலப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது காடி ஐசென்கோட் குற்றம் சாட்டியுள்ளார்.
வெறும் அரசியல்
இஸ்ரேலின் புதிய அரசாங்கத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐசென்கோட், வெள்ளிக்கிழமை இஸ்ரேலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து நீண்ட சமூக ஊடகப் பதிவொன்றை வெளியிட்டார்.

அதில், இஸ்ரேலின் மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் அரபு குடிமக்கள் என குறிப்பிட்டுள்ள அவர், தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து, பதவி விலகும் பிரதமரும் அவரது ஆதரவாளர்களும் வெறும் அரசியல் காரணங்களுக்காகத் தூண்டிவிட்ட இனவெறி மற்றும் வன்முறை நிறைந்த, தங்களை அங்கீகரிக்க முடியாதவர்கள் என நிரூபிக்கும் பிரச்சாரத்தை அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர் என்றார்.
இஸ்ரேலின் பிரதமர் அனைத்து குடிமக்களுக்குமான பிரதமர்; தனக்கு வாக்களிக்காதவர்கள் உட்பட அனைவருக்குமான பிரதமர் அவர் என்றும் ஐசென்கோட் கூறியுள்ளார்.
இஸ்ரேலின் அரபு குடிமக்கள் இஸ்ரேலிய வரலாற்றின் ஒரு அங்கமாவர். அவர்களை ஓரங்கட்ட முயற்சிப்பதும், ஒரு குழுவாக அவர்களைக் களங்கப்படுத்த முற்படுவதும் அரசுக்கு எதிரான செயலாகும் என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
இஸ்ரேலில் அக்டோபர் 27 அன்று நடைபெற்ற தேர்தலில், ஐசென்கோட்டின் நான்கு கட்சி கூட்டணி 48 ஆசனங்களையும், நெதன்யாகுவின் வலதுசாரி மற்றும் மதவாதக் கூட்டணி 53 ஆசனங்களையும் வென்றன.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதற்குத் தேவையான 61 ஆசனங்களை எட்டுவதில் இரு முன்னணியும் தோல்வியடைந்தனர். இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன குடிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரபு தலைமையிலான கட்சிகள், சாதனை அளவாக 19 ஆசனங்களைக் கைப்பற்றின.

இந்த நிலையில், அரபு பெரும்பான்மை கொண்ட கட்சிகள் தேர்தல் மோசடியில் ஈடுபட்டதாக நெதன்யாகு தொடர்ச்சியாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்; ஆனால், இஸ்ரேலின் தேர்தல் அதிகாரிகளே இக்குற்றச்சாட்டுகளை நிராகரித்துவிட்டனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பை ஒரு பயங்கரவாதக் குழு என்று அறிவிக்க மறுத்ததற்காக, அரபுத் தலைமயிலான கட்சிகளை நெதன்யாகு தொடர்ச்சியாக விமர்சித்துள்ளார்; இருப்பினும், அந்தக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஹமாஸ் முன்னின்று நடத்திய அந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நெதன்யாகுவுக்குப் பதிலாக
இந்த நிலையில், அரபு கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஒருவர் கருத்து வேறுபாடு கொள்ளலாம், அவர்களில் சிலர் மீது ஆழ்ந்த வெறுப்பைக் கூட உணரலாம்; ஆனால், ஒரு முழு சமூகப் பிரிவையும் அவதூறு செய்வதை அனுமதிக்க முடியாது, அனுமதிக்கவும் கூடாது; நான் அதை அனுமதிக்க மாட்டேன் என்று ஐசென்கோட் கூறியுள்ளார்.

நெதன்யாகுவுக்குப் பதிலாக ஐசென்கோட்டை நியமிக்க அரபுத் தலைமயிலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இருப்பினும், அத்தகைய கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பை ஐசென்கோட் நிராகரித்துவிட்டார்; அவ்வாறு அமைத்திருந்தால் அவருக்கு 67 ஆசனங்களைக் கொண்ட கூட்டணி கிடைத்திருக்கும்.
ஆனால், ஐக்கிய தோரா யூதம் மற்றும் ஷாஸ் ஆகிய இரண்டு தீவிர பழமைவாதக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றால், அவருக்குச் சரியாக 61 ஆசனங்கள் கிடைக்கும்.
அவசரகால அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள் குறித்துப் பேசிய ஐசன்காட், தனது பதவிக்காலத்தை கூடிய விரைவில் நிறைவேற்ற விரும்புவதாகவும், அவ்வாறு செய்யத் தவறினால் அது ஒரு பெரும் தவறாக அமையும் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.