பிரபல போதைப்பொருள் கும்பல் தலைவன் கைது: மெக்சிகோவில் வெடித்த வன்முறையில் 11 பேர் பலி
El Chapo Isidro arrested in Mexico, 11 Dead in clash : மெக்சிகோவில் பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவர் ஃபௌஸ்டோ இசிட்ரோ மெசா ஃபுளோரஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல் சாப்போ இசிட்ரோ கைது
வட மேற்கு மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான ஃபௌஸ்டோ இசிட்ரோ மெசா ஃபுளோரஸ்(Fausto Isidro Meza Flores) அந்நாட்டு சிறப்பு படை வீரர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
'எல் சாப்போ இசிட்ரோ' (El Chapo Isidro) என அழைக்கப்படும் ஃபௌஸ்டோ இசிட்ரோ மெசா ஃபுளோரஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து வெடித்த வன்முறையில் இதுவரை குறைந்தது 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

பெல்ட்ரான் லெய்வா (Beltran Leyva) என்ற குற்ற கும்பலின் தலைவராக எல் சாப்போ இசிட்ரோ செயல்பட்டு வந்ததாக மெக்சிகோ அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் அமெரிக்காவின் FBI அமைப்பால் தேடப்பட்டு வரும் 10 முக்கிய குற்றவாளிகள் பட்டியலிலும் இவர் இடம்பெற்றுள்ளார்.
சினாலோவா மாகாணத்தில் நள்ளிரவில் சிறப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடி சோதனையின் போது எல் சாப்போ இசிட்ரோ கைது செய்யப்பட்டுள்ளார்.
வெடித்த வன்முறை
இந்த கைது நடவடிக்கையின் போது சினாலோவா மாகாணத்தின் குவாசாவே நகரமே மிகப்பெரிய கலவர பூமியாக மாறியது.

பேஸ்பால் மைதானத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு காரணமாக போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு உயிர் தப்பி ஓடினர்.
மேலும் வாகனங்கள் மற்றும் எரிபொருள் நிலையங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. ராணுவ ஹெலிகாப்டர்கள் குடியிருப்பு பகுதியை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திய காட்சிகளும் இணையத்தில் வெளியாகியது.
இரு தரப்பிற்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 மெக்சிகன் ராணுவ வீரர்களும், 7 போதைப் பொருள் கும்பல் உறுப்பினர்களும் கொல்லப்பட்டதாக மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.