பிரித்தானியாவில் மோசடியில் சிக்கிய இந்திய வம்சாவளி தம்பதி: ஒரு எச்சரிக்கை செய்தி
பிரித்தானியாவிலிருந்து இந்தியா புறப்பட திட்டமிட்ட வயது முதிர்ந்த ஒரு தம்பதி மோசடி ஒன்றில் சிக்கிய நிலையில், தங்களைப்போல மற்ற முதியவர்கள் ஏமாறாமல் இருப்பதற்காக அந்த மோசடி குறித்து எச்சரித்துள்ளனர்.
மோசடியில் சிக்கிய இந்திய தம்பதி
இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் தினேஷ் ஜன்சாரி (80), சசிகலா (78) தம்பதியர், இரண்டு மாத பயணமாக இந்தியா செல்ல, நீண்ட காலமாக திட்டமிட்டுவந்துள்ளனர்.

சமீபத்தில் இந்தியா புறப்படுவதற்காக டிக்கெட் முன்பதிவு செய்யும் முயற்சியை தினேஷ் துவங்க, வாட்ஸ் ஆப் வாயிலாக தினேஷை தொடர்புகொண்ட ஒருவர், தன்னை Fly Expedia பயண ஏஜன்சியில் பணிபுரிபவர் என அறிமுகம் செய்துகொண்டுள்ளார்.
தினேஷ் ஏற்கனவே Expedia என்னும் பிரபல நிறுவனம் குறித்து அறிந்திருந்ததால், அந்த நபரை நம்பி டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.
அவர்கள் இருவரும் இந்தியா செல்வதற்காக லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் வந்தடைய, விமான நிறுவன ஊழியர்கள் அந்த டிக்கெட் போலியானது என்று கூற, அதற்குப் பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டது அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.
சுமார் 2,500 பவுண்டுகளை இழந்த தம்பதியர், பின்னர் ஒருவாரத்துக்குப் பின் மீண்டும் டிக்கெட் வாங்கி இந்தியா சென்றுள்ளனர்.
இந்நிலையில், இதுபோல வாட்ஸ் ஆப் வாயிலாக அறிமுகமாகி மோசடி செய்யும் ஒரு கும்பல் உள்ளது என்பதையும், அவர்கள் முதியவர்களைக் குறிவைக்கிறார்கள் என்பதையும் கூறி மற்றவர்களை எச்சரிப்பதற்காக இந்த செய்தியை பகிர்ந்துகொள்வதாக தெரிவித்துள்ளனர் தினேஷ், சசிகலா தம்பதியர்.
அவர்கள் இந்த மோசடி குறித்து பொலிசிலும் புகார் செய்துள்ள நிலையில், இதுபோல் ஒன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் குறித்து தங்கள் உற்றார் உறவினர்களிடம் அது உண்மையான நிறுவனம்தானா என விசாரித்து பணம் செலுத்துமாறு பொலிசார் மக்களை அறிவுறுத்தியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |