5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்! தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் மனு அளித்துள்ளதால் பரபரப்பு
தமிழகத்தில் நாளை ஏப்ரல் 6ம் திகதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில் குறிப்பிட்ட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஏப்ரல் 4ம் திகதி மாலை 7 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், கொளத்தூர், திருச்சி மேற்கு, சேப்பாக்கம், திருவண்ணாமலை, காட்பாடி ஆகிய 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய கோரி தேர்தல் ஆணையத்திடம் அதிமுக தரப்பில புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், திமுக-வினர் வாக்காளர்களுடைய செல் எண்ணை வாங்கி கூகுள் பே மூலமாக அவர்களின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்துகின்றனர்.
குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், அனைத்து மகளிர் சுய உதவிக்கு குழுக்களையும் அழைத்து, ஒவ்வொரு உதவிக்கு குழுவுக்கும் ரூ.10,000 வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் இந்த ஜனநாயக படுகொலை அரங்கேறும் நிலையில் குறிப்பாக கொளத்தூர், திருச்சி மேற்கு, சேப்பாக்கம், திருவண்ணாமலை, காட்பாடி ஆகிய 5 தொகுதிகளில் திமுக-வினர் பணத்தை வாரி இறக்கின்றனர்.
இப்படி மக்களுக்கு பணத்தை கொடுத்து எப்படியாவது செயற்கையாக வெற்றிப்பெறலாம் என திமுக நினைக்கின்றார்கள், எனவே இந்த 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யுமாறு அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
