போர் நிறுத்தத்தை சீர்குலைக்கும் டீப் ஸ்டேட் அமைப்பு: எலான் மஸ்க் ஆதரவு
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் “டீப் ஸ்டேட்டின்” சதி குறித்த துளசி கபார்டின் கருத்தை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஆதரித்துள்ளார்.
டீப் ஸ்டேட் அமைப்பின் சதி
அமெரிக்கா தேசிய உளவுத்துறை இயக்குனர் துளசி கபார்ட் சமீபத்தில், அமெரிக்க வெளியுறவு கொள்கைகளை தீர்மானிப்பதில் இதற்கு பின்னால் செயல்படும் “டீப் ஸ்டேட்”(Deep State) அமைப்புகள் சதி செய்து வருவதாக குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த அமைப்பு உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான முயற்சிகளை சீர்குலைக்க பார்ப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து X தளத்தில் கருத்து பதிவிட்ட துளசி கபார்ட், உக்ரைன் ரஷ்யா போரை விரும்பும் சில அதிகார வர்க்கத்தினரும், அதற்கு ஆதரவான சில ஊடகங்களும் போர் தொடர்பான தவறான தகவல்களை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும் ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஐரோப்பாவை முழுமையாக கைப்பற்ற எண்ணுவதாக வெளிவரும் கூற்றுகளுக்கும் கபார்ட் மறுப்பு தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் ஆதரவு

இந்நிலையில் “டீப் ஸ்டேட்டின்” சதி குறித்த துளசி கபார்டின் கருத்துக்கு உலகின் முன்னணி செல்வந்தர் மற்றும் தொழிலபதிபரான எலான் மஸ்க் ஆதரவு வழங்கியுள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்த ஆதரவு புதிய வியப்புகள் எதையும் ஏற்படுத்தவில்லை, ஏனெனில் சர்வதேச அமைப்புகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே எலான் மஸ்க் கடுமையான விமர்சனம் முன்வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்தை கலைக்க வேண்டும் என்றும், நேட்டோ அமைப்பில் இருந்து அமெரிக்கா நீடிக்க வேண்டுமா என்பது போன்ற தனது சந்தேகங்களையும் எலான் மஸ்க் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |