தினசரி ரூ 8 கோடி பரிசு... வாக்காளர்களை கவரும் எலோன் மஸ்கின் திட்டத்திற்கு எதிராக வழக்கு
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை ஆதரிக்கும் பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க் தற்போது ரூ 8 கோடி பரிசளிக்கும் விவகாரத்தால் விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார்.
ட்ரம்புக்கு ஆதரவாக
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் நடக்கவிருக்கிறது. வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் பல கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாகவே குறிப்பிட்டுள்ளன.
இந்த நிலையில், போட்டி மிகுந்த சில மாகாணங்களில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க் பரப்புரை செய்து வருகிறார்.
வார இறுதியில் பென்சில்வேனியா மாகாணத்தில் பரப்புரையில் ஈடுபட்ட எலோன் மஸ்க், தேர்தல் நாள் வரையில், இனி எஞ்சியுள்ள ஒவ்வொரு நாளும் வாக்காளர் ஒருவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் (இந்திய பண மதிப்பில் ரூ 8.40 கோடி) பரிசாக அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
தமது அமெரிக்க அரசியலமைப்பை காப்போம் என்ற மனுவை ஆதரிக்கும் வாக்காளர்களில் ஒருவருக்கு இந்த வாய்ப்பை வழங்க உள்ளார். ஆனால் எலோன் மஸ்கின் இந்த முடிவு தற்போது விசாரணையை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பென்சில்வேனியாவின் ஜனநாயகக் கட்சி ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ, தேர்தல் வாக்குறுதியாக பணம் தரும் எலோன் மஸ்க்கின் முடிவை விசாரிக்க வேண்டும் என சட்ட அமலாக்கத்துறைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அரசியலமைப்பை காப்போம்
பென்சில்வேனியா மாகாணம் என்பது ட்ரம்ப் மற்றும் ஹாரிஸ் இருவருக்கும் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டிய மாகாணமாகும். மட்டுமின்றி, மஸ்கின் தேர்தலுக்கான அமைப்பு ஒன்று டொனால்டு ட்ரம்பை ஆதரித்து தீயாக பணியாற்றி வருகிறது.
வாக்காளர்களை ஒருங்கிணைப்பதும், பதிவு செய்த வாக்காளர்களை வாக்களிக்க உதவும் நடவடிக்கைகளிலும் களமிறங்கியுள்ளது. ஆனால் எலோன் மஸ்க் அமைப்புக்கு போதிய ஆதரவு மக்கள் மத்தியில் இல்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே 1 மில்லியன் டொலர் அறிவிப்பை எலோன் மஸ்க் வெளியிட்டிருந்தார். கடும் போட்டி மிகுந்த அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 7 மாகாண வாக்காளர்களுக்கும் இந்த 1 மில்லியன் டொலர் பரிசு பொருந்தும்.
அத்துடன் அமெரிக்க அரசியலமைப்பை காப்போம் என்ற மனுவை ஆதரித்து பதிவு செய்யும் வாக்காளர்களுக்கு தலா 100 டொலர் பரிசும், இன்னொரு வாக்காளருக்கு பரிந்துரைத்தால் இன்னொரு 100 டொலர் பரிசும் வழங்குவதாக மஸ்க் அறிவித்துள்ளார்.
தேர்தலின் போது பெருந்தொகை பரிசளிப்பதன் சட்டபூர்வமான தன்மை எதிர்வரும் நாட்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பது உறுதி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |