வெறும் 4 நாட்களில் ரூ 78900 கோடியை இழந்த டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்
இரண்டு மாதங்களில் முதல் முறையாக எலோன் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 400 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்குக் கீழே குறைந்துள்ளது.
ட்ரம்பின் தேர்தல் வெற்றி
டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து டெஸ்லாவின் பங்கு விலை 27 சதவிகிதம் குறைந்துள்ளதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது என்றே தெரிய வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான மஸ்க்கின் தொடர்பு டெஸ்லாவின் எதிர்காலத்திற்கு பயனளிக்கும் என்று முதலீட்டாளர்கள் நம்பியதால், அந்தக் காலகட்டத்தில் டெஸ்லா மின்சார கார் நிறுவனம் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியது.
இந்த நிலையில் தற்போது ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், ட்ரம்பின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, டிசம்பர் 17 அன்று மஸ்க்கின் சொத்து மதிப்பு 486.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது.
ஆனால் அப்போதிருந்து, டெஸ்லாவின் பங்குகள், குறிப்பாக கடந்த வாரம் மோசமான நெருக்கடியை எதிர்கொண்டது. டெஸ்லாவின் மாதாந்திர விற்பனை புள்ளிவிவரங்கள் வெளியாகி ஏமாற்றமளித்த நிலையில் நிறுவனத்தின் பங்குகள் 11 சதவிகிதம் ஒரேயடியாக சரிந்தன.
ஜேர்மனியில் டெஸ்லாவின் விற்பனை 59 சதவிகிதம் குறைந்து, 2021 க்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. சீனாவில் விற்பனை முந்தைய ஆண்டை விட 11.5 சதவிகிதம் குறைந்துள்ளது.
திங்களன்று, டெஸ்லாவின் பங்குகள் தொடர்ந்து நான்காவது வர்த்தக நாளாக சரிந்து, மேலும் 3 சதவிகிதம் சரிவடைந்து 350.73 அமெரிக்க டொலர்களாக இருந்தது. டெஸ்லாவின் பங்குச் சந்தை நகர்வுகளில் மஸ்க்கின் அரசியல் நிலைப்பாடும் பெரும் பங்கு வகித்துள்ளது.
சமீபத்திய சரிவு
ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, மஸ்க் வாஷிங்டனில் அதிக கவனம் செலுத்தி வருகிறார், பல்வேறு செலவுக் குறைப்பு முயற்சிகளில் பணியாற்றி வருகிறார். மட்டுமின்றி, தாமாக முன்வந்து ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு ஈடாக எட்டு மாத ஊதியத்தை வழங்குவதன் மூலம் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்தை அவர் முன்னெடுத்து வருகிறார்.
இருப்பினும் டெஸ்லாவுக்கு நேரடியாக பயனளிக்கும் கொள்கைகளை ட்ரம்ப் நிர்வாகம் இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. மஸ்க்கின் டெஸ்லா பங்குகள் இன்னும் அவரது சொத்து மதிப்பின் பெரும்பகுதியை கொண்டிருப்பதால், அவற்றின் சமீபத்திய சரிவு அவரது சொத்து மதிப்பையும் ஆட்டம் காண செய்துள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் அவரது 42 சதவிகித பங்குகள் தற்போது 136 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடையவை, இது அவரது ஒட்டுமொத்த நிகர சொத்து மதிப்பில் குறிப்பிடத்தக்க தொகையாகும்.
டெஸ்லா பங்குகளின் திடீர் சரிவு நான்கு நாட்களில் சுமார் ரூ 78933 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எலோன் மஸ்கின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது 378.8 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே தெரிய வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |