காஸா போர் நிறுத்தம்... பெஞ்சமின் நெதன்யாகு விடுத்த மிரட்டல்
சனிக்கிழமை நண்பகலுக்குள் ஹமாஸ் படைகள் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்காவிட்டால், இஸ்ரேல் காஸாவில் மீண்டும் போரை முன்னெடுக்கும் என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
மோசமான விளைவுகள்
இரு தரப்பினருக்கும் இடையே மூன்று வாரங்களாக நிலவி வந்த போர் நிறுத்தத்தை உடைக்கும் வகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தலை அடுத்தே இஸ்ரேல் பிரதமரும் மிரட்டல் விடுத்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை பெஞ்சமின் நெதன்யாகு பதிவு செய்துள்ள காணொளி ஒன்றில், ஹமாஸ் படைகள் மொத்தமாக தோற்கடிக்கப்படும் வரையில் இஸ்ரேல் இராணுவம் தீவிரமான சண்டையில் திரும்பும் என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, திங்களன்று பத்திரிகையாளர்களிடன் கூறிய ட்ரம்ப், சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள் அனைத்து காஸா பணயக்கைதிகளையும் ஹமாஸ் படைகள் திருப்பி அனுப்பவில்லை என்றால், போர் நிறுத்தத்தை ரத்து செய்யுங்கள் என்று நான் கூறுவேன்.
அத்துடன் மிக மோசமான விளைவுகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என கடுமையாக சாடியிருந்தார். இதுவரை ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹமாஸ் படைகள் பணயக்கைதிகளை கட்டம் கட்டமாகவே விடுவித்து வந்துள்ளது.
ஆனால், காஸா பகுதியை மொத்தமாக அமெரிக்கா கைப்பற்ற இருப்பதாக ட்ரம்ப் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்தே, பணயக்கைதிகளை மொத்தமாக விடுவிக்க வேண்டும் என்ற நெருக்கடியை ட்ரம்ப் அளிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இது மட்டுமே ஒரு வழி
மேலும், செவ்வாய்க்கிழமை ஜோர்தானின் அப்துல்லா அரசரையும் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் சந்தித்துப் பேசவிருக்கிறார். இந்த சந்திப்பில் காஸாவை அமெரிக்கா கைப்பற்றும் திட்டம் குறித்தும் காஸாவில் குடியிருக்கும் 2 மில்லியன் மக்களை மொத்தமாக வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பிலும் விவாதிக்க உள்ளனர்.
காஸா தொடர்பான ட்ரம்பின் கருத்துக்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் அப்துல்லா அரசர். இந்த நிலையில், ஹமாஸ் படைகளுக்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கையா என்ற கேள்விக்கு ட்ரம்ப் ஆம் என்றே பதிலளித்துள்ளார்.
ஆனால் ட்ரம்பின் கருத்துக்கு பதிலளித்துள்ள ஹமாஸ் அதிகாரிகள் தரப்பு, இரு தரப்பினரும் மதிக்க வேண்டிய ஒரு ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டிருப்பதை ட்ரம்ப் நினைவில் கொள்ள வேண்டும்.
பல காலமாக இஸ்ரேல் சிறையில் அவதிப்படும் பாலஸ்தீன மக்களை மீட்க எங்களுக்கு இது மட்டுமே ஒரு வழி. மிரட்டல் விடுப்பதும் அச்சுறுத்துவதும் தீர்வாகாது, விவகாரத்தை மேலும் சிக்கலாக்கும் என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |