இந்திய சந்தையில் நுழைவதில் பின்வாங்கிய எலான் மஸ்க்? வெளியான தகவல்
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் நுழைவது கேள்விக்குறியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்லா நிறுவனம்
உலகப் பணக்காரரான எலான் மஸ்க் கார் தயாரிப்பிலும் முன்னணியில் உள்ளார். அவரது டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் தயாரிப்பு ஆலை சீனாவில் உள்ளது.
அதேபோல் இந்தியாவிலும் தொடங்க உள்ளதாகவும், அதற்காக இந்திய அரசும் டெஸ்லா நிறுவனமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செய்தி வெளியானது.
இதன் காரணமாக பல கோடி ரூபாய் முதலீட்டு திட்டங்களை மஸ்க் அறிவிப்பார் என்றும், அவரது இந்தியா பயணத்தின்போது அது வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
திட்டம் எதுவும் இல்லை
ஆனால், பார்லி.,தேர்தல் காரணமாக மஸ்க்கின் வருகை ஒத்திவைக்கப்பட்டது. எனினும் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றபோது மஸ்க் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதில், ''இந்தியாவில் எமது நிறுவனம் உற்சாகமான பணிகளைச் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என தெரிவித்திருந்தார்.
எனவே டெஸ்லா நிறுவனத்தின் இந்திய முதலீடு உறுதிப்படுத்தப்பட்டதாக தொழில்துறையினர் கருதினர்.
இந்த நிலையில் Bloomberg வெளியிட்டுள்ள அறிக்கையில், டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகள், முதலீடு சம்பந்தமாக இந்திய அதிகாரிகளை தொடர்பு கொள்வதை நிறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், நிதி பிரச்சனைகள் காரணமாக இந்தியாவில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளும் திட்டம் எதுவும் டெஸ்லாவிடம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |