ரஷ்ய எண்ணெய் விவகாரம்... ஐரோப்பிய ஆணையத் தலைவர் அறிவித்த அதிரடி முடிவு
ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் ரஷ்ய விமானங்கள் அத்துமீறிய விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஐரோப்பிய ஆணையத் தலைவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தடை செய்யும்
2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை முற்றிலுமாக தடை செய்யும் என்று அறிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய போரில் நிதியுதவி அளிக்கும் முயற்சியை முடக்குவதே இந்த முடிவின் நோக்கமாக கூறப்படுகிறது.
செவ்வாயன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்தார்.
குறித்த சந்திப்பின் போது ரஷ்ய எரிசக்தியை சார்ந்திருப்பதில் இருந்து வெளியேற ஐரோப்பிய ஒன்றியம் செய்து வரும் முன்னேற்றத்தை அவர் எடுத்துரைத்தார், ரஷ்யா மீது மேலும் தடைகளை விதிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டையும் வலியுறுத்தினார்.
நாங்கள் ஏற்கனவே ரஷ்யாவிலிருந்து எரிவாயு இறக்குமதியை பெருமளவில் குறைத்துள்ளோம். ரஷ்ய நிலக்கரியை முற்றிலுமாக கைவிட்டோம், மேலும் எண்ணெய் இறக்குமதியும் பெருமளவில் குறைத்தோம், இருப்பினும் சில நாடுகள் இன்னும் ரஷ்யாவை சார்ந்திருக்கின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முற்றிலுமாக கைவிட
2027 ஆம் ஆண்டுக்குள் ரஷ்யா தொடர்பை முடித்துக்கொள்ள முடிவு செய்திருந்ததாகவும், ஆனால் தற்போது 2025 இறுதிக்குள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை முற்றிலுமாக கைவிட முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன், ரஷ்யா மீது பொருளாதாரத்தடைகள் விதிக்கவும் உர்சுலா வான் டெர் லேயன் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் போருக்கு முன்னர் ரஷ்யாவில் இருந்து 27 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதியை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்தது. ஆனால் தற்போது அது 3 சதவீதமாக சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |