அடுத்த கட்டத்திற்கு நகரும் உக்ரைன்: ஜோ பைடனிடம் திட்டம் ஒன்றை முன்வைக்கும் ஜெலென்ஸ்கி
பேச்சுவார்த்தைகளால் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் திட்டமொன்றை முன்வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திட்டத்தின் ஒரு பகுதி
தொடர்புடைய திட்டத்தை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாக வாய்ப்புள்ள இருவரிடமும் விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவுக்குள் ஊடுருவலை முன்னெடுத்து மூன்று வாரங்களாகியுள்ள நிலையில், தங்களின் திட்டத்தின் ஒரு பகுதி அந்த ஊடுருவல் எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவை கட்டாயப்படுத்துவதே தங்கள் திட்டத்தின் முதன்மையான நோக்கம். அது நிறைவேற வேண்டும் என்பது தங்களின் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் அடுத்த நகர்வு என்ன என்பது குறித்து விளக்க மறுத்த ஜெலென்ஸ்கி, கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு ட்ரம்புடனும் தங்கள் அடுத்த நகர்வு அல்லது திட்டம் என்னவாக இருக்கும் என்பதை விளக்கப்படும் என்றார்.
செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் முன்னெடுக்கப்படும் ஐக்கிய நாடுகள் மன்ற கூட்டத்திற்கு தாம் செல்ல இருப்பதாகவும், அப்போது ஜனாதிபதி பைடனை சந்திக்க தயாராவதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது
ஆனால் உக்ரைனின் எல்லை தாண்டிய ஊடுருவலை குறிப்பிட்டு ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் Sergei Lavrov தெரிவிக்கையில், பேச்சுவார்த்தை என்ற கேள்விக்கே இடமில்லை என்றார்.
இந்த நிலையில் போர் தொடர்பில் புடினுடன் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என ஜெலென்ஸ்கி வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். உக்ரைனின் நான்கு பிராந்தியங்களின் பெரும்பகுதி மற்றும் கிரிமியாவையும் ரஷ்யா குறிவைத்துள்ளது.
ஆனால் தற்போது ரஷ்யாவில் குர்ஸ்க் பிரந்தியத்தில் 1,200 சதுர கி.மீக்கு மேல் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் போரை முடிவுக்கு கொண்டுவர தங்கள் பிராந்தியங்களை விட்டுக்கொடுக்க பல நாடுகள் ஆலோசனை கூறியதாகவும், ஆனால் குர்ஸ்க் பிராந்தியத்தில் நடந்த தாக்குதல் தற்போது அந்த சூழலை மாற்றியுள்ளதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |