வினையான விளையாட்டு... ஜார்வோ மீது அதிரடி நடவடிக்கை எடுத்த இங்கிலாந்து: குவிந்த ஆதரவு
இந்தியா- இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடரில், வேடிக்கை சம்பவங்களில் ஈடுபட்ட ஜார்வோ மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வெற்றி, தோல்விகளை கடந்து அதிகம் பேசப்பட்டு வரும் நபர் ஜார்வோ. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின்போது இந்திய அணியின் ஜெர்சியை அணிந்த ஜார்வோ, களத்தடுப்பில் ஈடுபடுவதுபோல உள்ளே வந்தார்.
அதனை கண்ட நடுவர்கள் மைதான ஊழியர்கள் உதவியுடன் அவரை குண்டுக்கட்டாக வெளியேற்றினர். துல்லியமான ஒரு இந்திய அணி ஜெர்ஸியை அணிந்திருந்தார் ஜார்வோ. அதில், லோகோ, ஸ்பான்சர்ஸ் பெயர் என்று அனைத்தும் மிகச் சரியாக இருந்தது.
ஜெர்ஸிக்கு பின்னால் ஒரு இலக்கமும், அவரது பெயரும் (jarvo) இருந்தது. ஒரு நிமிடத்தில் அவரும் ஒரு வீரர் தான் என ரசிகர்கள் நம்பிவிட்டனர். மீண்டும் ஹெட்டிங்லி மைதானத்திலும் தனது சேட்டையை செய்தார். இந்தமுறை இந்திய அணித் தலைவர் கோஹ்லியாக உருமாறி அவர் துடுப்பாட்டத்திற்காக களத்திற்குள் நுழைந்து இந்திய அணிக்கு பீதியை ஏற்படுத்தி இருக்கிறார்.
ரோஹித் சர்மா 59 ஓட்டங்களில் வெளியேறி சென்ற போது, அணித் தலைவர் கோஹ்லி களமிறங்க தயாராகிக் கொண்டிருந்தார். அதே இடைவெளியில் மைதானத்திற்குள் பேட், கிளவுஸ், ஹெல்மெட் எல்லாம் அணிந்துகொண்டு ஒரு துடுப்பாட்ட வீரர் போல நுழைந்துவிட்டார் ஜார்வோ.
இதைப் பார்த்து நடுவர்கள் அதிர்ச்சியாக பின்னர் பாதுகாவலர்கள் வந்து அவரை வெளியே இழுத்துகொண்டு போனார்கள். இங்கிலாந்து அணி விளையாடும் போட்டிகளுக்குள் வந்து பிராங்க் செய்வதை இவர் வாடிக்கையாக செய்து வருகிறார்.
ஆட்டத்தின் போது பாதிப்பை ஏற்படுத்தும் இவரை போன்ற நபர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
ஹெட்டிங்லி மைதானத்திற்குள் இனி வாழ்நாள் முழுவதும் நுழைவதற்கு ஜார்வோவுக்கு தடைவிதித்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்தான், தானாக முன்வந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என தெரிய வந்துள்ளது.