வெற்றியை நோக்கி இந்தியா! விக்கெட்டுகளை அள்ளிய பும்ரா... தோல்வியை தவிர்க்க போராடும் இங்கிலாந்து
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு அருமையான வாய்ப்பு உள்ளது.
இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி, டிரண்ட் பிரிட்ஜில் கடந்த 4-ஆம் திகதி துவங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, இந்தியாவின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், 183 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
அதன் பின் ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல்(86) மற்றும் ரவீந்திர ஜடேஜா(56) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணி 278 ஓட்டங்கள் எடுத்தது.
இதயடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர்களான ராரி ஜோஷப் பர்ன்ஸ் 18 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் டாம் சிப்ளி 28 ஓட்டங்களும், இவர்களைத் தொடர்ந்து வந்த, ஜார்க் கிராவ்ளி 6, பேர்ஸ்டோவ் 30 என வெளியேற, தனி ஒருவனாக அணியின் கேப்டன் ஜோ ரூட், இந்திய அணியின் பந்து வீச்சை எளிதாக எதிர் கொண்டார்.
இதனால் சதம் அடித்த அவர் 172 பந்துகளில் 109 ஓட்டங்கள் எடுத்த நிலையில், பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 303 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
முதல் இன்னிங்ஸிலும் பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இதையடுத்து, 209 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடி வரும் இந்திய அணி சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 24 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இன்று நான்காவது நாள், நாளை ஐந்தாவது நாள் முழுமையாக இருப்பதால், இப்போட்டியில் இந்திய அணியே அதிகம் வெல்ல வாய்ப்புள்ளது.