மொத்த உக்ரைன் படைகளுக்கும் பேரழிவை ஏற்படுத்த முடியும்... மிரட்டிய எலோன் மஸ்க்
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை தீமையின் மொத்த உருவம் என கடுமையாக விமர்சித்திருந்த எலோன் மஸ்க், தற்போது மொத்த உக்ரைன் படைகளுக்கும் பேரழிவை ஏற்படுத்த தம்மால் முடியும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
அதிர்ச்சி தரும் கருத்து
உலகின் பெரும் கோடீஸ்வரரான எலோன் மஸ்க் சமீப மாதங்களாக உலக அரசியல் தொடர்பில் தனது கருத்துகளை பதிவு செய்வதும், பல நாடுகளின் அரசியல் கட்சிகளுக்கு வெளிப்படையான ஆதரவும் அளித்தும் வருகிறார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பொறுப்புக்கு வந்ததன் பின்னர் அவரது செல்வாக்கும் உலக அளவில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சமீப நாட்களாக உக்ரைன் ஜனாதிபதிக்கு எதிராகவும் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துவரும் எலோன் மஸ்க், தமது எக்ஸ் பக்கத்தில் உக்ரைன் இராணுவம் தொடர்பில் அதிர்ச்சி தரும் கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார்.
தமது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய அமைப்பை முடக்குவதன் ஊடாக மொத்த உக்ரைன் படைகளுக்கும் பேரழிவை ஏற்படுத்த தம்மால் முடியும் என எலோன் மஸ்க் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார்.
ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய அமைப்பானது உக்ரைன் இராணுவ தகவல்தொடர்புகளைப் பராமரிப்பதில் இன்றியமையாததாக இருந்து வருகிறது. தமது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள எலோன் மஸ்க்,
உக்ரைனுக்கு தோல்வி உறுதி என தெரிந்தும் கடந்த சில ஆண்டுகளாக நீடிக்கும் போரால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுவது தான் மிச்சம் என குறிப்பிட்டுள்ளார்.
பேரழிவை சந்திக்கும்
மேலும், தன்னுடைய ஸ்டார்லிங்க் அமைப்பு உக்ரைன் இராணுவத்தின் முதுகெலும்பாக செயல்படுவதால் உக்ரைன் மீது நேரடியாகப் போரிட புடினை அப்போது தாம் சவால் விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தாம் அந்த அமைப்பை முடக்கினால், தற்போது உக்ரைன் படைகள் மொத்தம் பேரழிவை சந்திக்கும் என்றார். அத்துடன், உக்ரைனை சேர்ந்த 10 பெரும் கோடீஸ்வரர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் எலோன் மஸ்க் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் உடனான அதன் முக்கியமான கனிம வளங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா ஸ்டார்லிங்க் அணுகலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தக்கூடும் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் பிப்ரவரி மாதம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |