செங்கோட்டையன் நீக்கப்பட்டது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
செங்கோட்டையன் நீக்கப்பட்டது ஏன் என எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
செங்கோட்டையன் நீக்கம்
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நேற்று அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தனது இல்லத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.
இதில் பேசிய அவர், "எனக்கு 2 முறை வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கட்சி உடைந்து விடக்கூடாது என்பதற்காக நான் அதை விட்டுக்கொடுத்தேன். சசிகலாவிடம் இருந்து எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை எப்படி பெற்றார் என்பதை நாடறியும். எடப்பாடி பழனிசாமி அதிமுக வருவதற்கு முன்பே நான் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன்.
சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கலாம். இத்தனை ஆண்டுகாலமாக என் வாழ்க்கையை அர்ப்பணித்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டது வருத்தமளிக்கிறது.

துரோகத்திற்கு ஒரு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமெனில் அதனை தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கொடுக்க வேண்டும்.
அதிமுகவை ஒருங்கிணைக்கவே தேவர் ஜெயந்தியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸை சந்தித்தேன். இதற்கு கிடைத்த பரிசாக தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன். சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன்" என பேசினார்.
எடப்பாடி பழனிசாமி விளக்கம்
செங்கோட்டையனின் குற்றச்சாட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "6 மாதங்களாகவே செங்கோட்டையன் கட்சிக்கு எதிராக தான் செயல்பட்டு வந்துள்ளார். அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்காக எனக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வு அதிமுக சார்பில் நடைபெறவில்லை.

கட்சி சார்பற்ற நிகழ்வில், எம்.ஜி.ஆர் ஜெயலலிதா, புகைப்படங்கள் இல்லை எனக்கூறி நிகழ்ச்சியில் பங்கேற்கமால் புறக்கணித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்லியும் கேட்கவில்லை.
அதன்பின்னர் அவர் கலந்துகொண்ட நிகழ்வில், கருணாநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் இருந்தது. அப்போதே அவர் திமுகவின் பி டீமாக செயல்பட தொடங்கிவிட்டார்.
செங்கோட்டையன் சட்டமன்றத்தில் திமுகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அதேபோல் ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இல்லை. அதிமுகவின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் செங்கோட்டையன் கைகோர்த்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் இணைந்து செயல்பட்டதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீர்மானம் நிறைவேற்றி கட்சியை விட்டு நீக்கியவர்களோடு தொடர்பு வைத்திருந்தால், நீக்காமல் என்ன செய்வார்கள்?
ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்ததாக சொல்லும் செங்கோட்டையனை ஏன் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார்? நான் முதல்அமைச்சராக வந்த பிறகு தான் மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கினேன்" என பேசினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |