துருக்கியின் அதிரடி முடிவு... அச்சத்தில் பயணத்தையே ரத்து செய்த இஸ்ரேல் ஜனாதிபதி
இஸ்ரேல் ஜனாதிபதிக்கு தங்கள் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுத்துள்ளதாக துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஜனாதிபதிக்கு மறுப்பு
அஜர்பைஜானில் நடைபெறும் COP காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தயாரான இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் இறுதியில் பயணத்தை ரத்தும் செய்யும் நிலை ஏற்பட்டது.
காஸா மீது இஸ்ரேலின் தீவிர தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எதிராக துருக்கி கடும் விமர்சனம் முன்வைத்து வருவதுடன், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, இஸ்ரேலுடன் இனி எந்த ஒப்பந்தங்களும் முன்னெடுக்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ஜனாதிபதிக்கு எதிராக தற்போது எடுத்துள்ள முடிவும் காசா தொடர்பில் துருக்கி கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்துவதாக கூறுகின்றனர். இஸ்ரேல் ஜனாதிபதிக்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், வேறு பாதையை தெரிவு செய்துகொள்ளவும் வலியுறுத்தியதாக எர்டோகன் தெரிவித்துள்ளார்.
பயணத்தை ரத்து செய்வதாக
துருக்கியின் எதிர்பாராத இந்த முடிவால், இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தமது பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியானது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அஜர்பைஜான் பயணத்தை ரத்து செய்வதாக இஸ்ரேல் ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.
ஓராண்டுக்கு முன்னர் ஹமாஸ் படைகள் இஸ்ரேல் எல்லையில் நடத்திய மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து, காஸா மீது இஸ்ரேல் போர் பிரகடனம் செய்தது. இதனையடுத்து இஸ்ரேலில் உள்ள தனது தூதரை துருக்கி திரும்பப் பெற்றது.
ஆனால் இஸ்ரேலுடனான அதன் உறவுகளை உத்தியோகப்பூர்வமாக துருக்கி துண்டிக்கவில்லை. மட்டுமின்றி அதன் தூதரகம் திறந்து செயல்படுவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |