இந்திய நிறுவனத்துடன் ஆயுத கொள்முதலில் முறைகேடு - எஸ்டோனியா அமைச்சர் ராஜினாமா
estonia defence minister hanno pevkur resigns over ammunition deal with indian firm: இந்திய நிறுவனத்துடன் ஆயுத கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பொறுப்பேற்று எஸ்டோனியா பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹன்னோ பெவ்கூர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்திய நிறுவனத்துடன் ஆயுத கொள்முதல் ஒப்பந்தம்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரவளித்து வரும் நிலையில், உக்ரைன் கடுமையான வெடிமருந்து பற்றாக்குறையை எதிர்கொண்டிருந்த நேரத்தில், உக்ரைனுக்காக பீரங்கிக் குண்டுகளை வழங்க எஸ்டோனியா முன்வந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய அமைதி வசதி நிதியிலிருந்து பணத்தைப் பயன்படுத்தி, எஸ்டோனியா பீரங்கிக் குண்டுகளை கொள்முதல் செய்ய இத்தாலியில் பதிவு செய்யப்பட்ட இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவின் நெகோ டிஃபென்ஸ் முனிஷன்ஸ்(Neco Defence Munitions) நிறுவனத்திற்கு சொந்தமான, இத்தாலியில் பதிவுசெய்யப்பட்ட டேட்டாசெல் எஸ்.ஆர்.எல்(Datasel SRL) நிறுவனத்துடன் 2024 ஆம் ஆண்டில் எஸ்டோனியாவின் பாதுகாப்பு முதலீட்டு மையம், சுமார் 70 மில்லியன் யூரோவிற்கு(இந்திய மதிப்பில் ரூ.768.50 கோடி) முன்பணம் வழங்கி ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில், இந்த நிறுவனம் தாமதமாக விநியோகம் செய்ததாகவும், தரமற்ற பீரங்கி குண்டுகளை வழங்கியதாகவும் குற்றஞ்சாட்டிய எஸ்டோனியா இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
விநியோக தாமதங்களை ஒப்புக்கொண்ட நிறுவனம், வெடிமருந்துகள் தரமாக இல்லை என்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
மேலும், 58 மில்லியன் யூரோ மதிப்பிலான பொருட்களைத் வழங்கிய நிலையில் எஸ்டோனியா ஒப்பந்தத்தை ஒருதரப்பாக ரத்து செய்தது தங்களுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய நடுவர் மற்றும் சமரச மையத்தில் இந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா
ஆயுத தயாரிப்பில் எந்தவித முன்அனுபவமும் இல்லாத நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக எஸ்டோனியாவின் தணிக்கைத் துறை குற்றச்சாட்டியுள்ளது.
இந்த நிறுவனத்திற்கு வழங்கபட்ட முன்பணத்தை திரும்ப பெறும் நோக்கில் எஸ்டோனியாவும் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியைத் திரும்பப் பெற முடியாவிட்டால், எஸ்டோனியா தனது சொந்த அரசு பட்ஜெட்டில் இருந்து சுமார் 70 மில்லியன் யூரோக்களை ஈடுசெய்ய வேண்டியிருக்கும் என்று கண்காணிப்புக் குழு எச்சரித்துள்ளது.

இதனையடுத்து, இதில் தனக்கு தனிப்பட்ட பொறுப்பு இல்லையென்றாலும், பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்வதாக எஸ்டோனியா பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹன்னோ பெவ்கூர்(Hanno Pevkur) தெரிவித்துள்ளார்.
“அவர் மீது தனிப்பட்ட எந்த தவறையும் காண முடியவில்லை. ஆனால் அரசியல் பொறுப்பு ஏற்படக்கூடும்" என எல்டோனியா பிரதமர் கிறிஸ்டன் மைக்கல் கருத்து தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |