2026 ஆம் ஆண்டுக்கான மீன்பிடி ஒதுக்கீடுகள்... ஒப்புக்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்வளத்துறை அமைச்சர்கள் 2026 ஆம் ஆண்டுக்கான மீன்பிடி ஒதுக்கீடுகள் குறித்து ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளனர்.
ஸ்பெயினுக்கு 143 நாட்கள்
இதனூடாக, மத்தியதரைக் கடலில் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவதற்கான முந்தைய முன்மொழிவு தவிர்க்கப்பட்டுள்ளது.

2026ல் மத்தியதரைக் கடலில் இழுவலை மீன்பிடி நாட்களைக் குறைப்பதற்கான ஐரோப்பிய ஆணையத்தின் திட்டத்தை எதிர்த்து வந்த ஸ்பெயின், தற்போதைய இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளது.
இரண்டு நாட்கள் கடுமையாக நீடித்தப் பேச்சுவார்த்தைகளின் இறுதியில், ஒரு நல்ல முடிவை எட்டியுள்ளோம் என்று ஸ்பெயின் வேளாண் துறை அமைச்சர் லூயிஸ் பிளானாஸ் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
திட்டமிடப்பட்ட நாள் குறைப்புகளுக்குப் பதிலாக, இந்த ஆண்டு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டைப் பெருமளவில் தக்கவைத்துக்கொண்டு, 2026 ஆம் ஆண்டில் ஸ்பெயினுக்கு 143 மீன்பிடி நாட்கள் அனுமதிக்கப்படும்.
தங்களது இந்த முன்மொழிவு நீண்ட கால அடிப்படையில் மீன்பிடிப்பை நிலையான நிலைகளுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரஸ்ஸல்ஸ் கூறியிருந்தது.

தற்போதைய இந்த ஒப்பந்தமானது அட்லாண்டிக், வட கடல், மத்திய தரைக்கடல், கருங்கடல் மற்றும் பிற கடல் பகுதிகளுக்கான 2026 ஆம் ஆண்டில் மீன்பிடி வரம்புகள் மற்றும் மீன்பிடி நாட்களையும் நிர்ணயிக்கிறது, மேலும் சில விதிகள் 2028 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுகின்றன.
கூடுதல் மீன்பிடி நாட்கள்
குறிப்பிடத்தக்க மாற்றமாக, பிஸ்கே விரிகுடாவில் உள்ள நார்வே லாப்ஸ்டர்களுக்கான பிடிப்பு வரம்புகளில் அடுத்த ஆண்டு 50 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பு என்பதும் அடங்கும்.
மேலும், மீன் இருப்புகளைப் பாதுகாப்பதற்காக, கிழக்கு மற்றும் மேற்கு பால்டிக் பகுதிகளில் உள்ள பொதுவான சோல் மீன்களுக்கான வரம்புகளில் குறைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

மீன்பிடிப் படகுகள் அதிக நிலையான நடைமுறைகளைப் பின்பற்றினால், கூடுதல் மீன்பிடி நாட்களைப் பெறலாம். பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கிய டென்மார்க்கின் மீன்வள அமைச்சர் ஜேக்கப் ஜென்சன் குறிப்பிடுகையில்,
இந்த ஒப்பந்தமானது, அறிவியல் ஆலோசனைக்கும் பாதிக்கப்படக்கூடிய மீன் வளங்களைப் பாதுகாப்பதற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துகிறது என்றார். குறித்த விதிகள் அனைத்தும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |