ஐரோப்பாவிற்கு எதிராக புதிய நாச வேலைகளை திட்டமிடும் ரஷ்யா: கஜா கல்லாஸ் விடுத்த எச்சரிக்கை
EU Intelligence Warns of Russia’s New Sabotage: ரஷ்யா புதிய நாச வேலைகளுக்கு தீவிரமாக தயாராகி வருவதாக ஐரோப்பிய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கஜா கல்லாஸ் விடுத்த எச்சரிக்கை
ரஷ்யாவிடம் இருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து திங்கட்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதி கஜா கல்லாஸ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதல்களுக்கு மத்தியில் அங்கு ஐரோப்பிய நாடுகளின் கடற்படை பலத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் கஜா கல்லாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பிரஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய உயர் பிரதிநிதி கஜா கல்லாஸ், ரஷ்யா ஐரோப்பிய ஜனநாயகத்திற்கு எதிராக மேலும் பல நாசவேலைகளை திட்டமிட்டு வருவதாக ஐரோப்பிய உளவுத்துறையை சுட்டிக்காட்டி எச்சரித்தார்.
உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் உதவிகளை தடுத்து நிறுத்தவே ரஷ்யா இத்தகைய நாசவேலைகளில் ஈடுபட முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஐரோப்பிய பாதுகாப்பு கவலைகளுக்கு அப்பால், மத்திய கிழக்கில் நிலவி வரும் அரசியல் பதற்றம் குறித்து விவரித்த கஹா கல்லாஸ், அப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை பாதுகாப்பு பணியான Aspides-க்கு கூடுதல் ராணுவ பலத்தை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.