ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு 45 பில்லியன் யூரோ கடன் வழங்க திட்டம் - உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை
EU Offers 45BN euro Ukraine Loan Backed by Reparations: உக்ரைனுக்கு 45 பில்லியன் யூரோ கடன் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு 45 பில்லியன் யூரோ கடன் திட்டம்
ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் அடுத்த ஆண்டுக்கான நிதித் தேவையை சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியம் (EU) புதிய 45 பில்லியன் யூரோ (சுமார் 49.5 பில்லியன் அமெரிக்க டொலர்) கடன் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
இந்தத் திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் 2027-ஆம் ஆண்டில் சுமார் 70 பில்லியன் யூரோ நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பெரும் பகுதியை நிரப்புவதற்காக இந்தக் கடன் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள நிதியை உக்ரைனின் சர்வதேச கூட்டாளிகள் வழங்குவார்கள் என ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் தெரிவித்தார்.
உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை
இந்தக் கடனின் முக்கிய அம்சமாக, உக்ரைன் உடனடியாக கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்யா போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கிய பின்னரே உக்ரைன் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உர்சுலா வான் டெர் லெயன் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகள் கொண்ட கூட்டமைப்பின் ஒப்புதலைப் பெற வேண்டிய இந்தத் திட்டம், கடந்த ஆண்டு ஏற்கப்பட்ட 90 பில்லியன் யூரோ நிதி உதவி திட்டத்திற்கு மேலதிகமாக அமையும். அந்தத் திட்டம் 2026 மற்றும் 2027 ஆண்டுகளுக்கான உக்ரைனின் செலவுகளை ஆதரிப்பதற்காக உருவாக்கப்பட்டது.
ஐரோப்பிய ஆணையம் கடன் பெற திட்டம்
புதிய கடன் தொகையில் அதிகபட்சமாக 25 பில்லியன் யூரோ வரை ராணுவ உதவிக்காகவும், 20 பில்லியன் யூரோ வரை உக்ரைன் அரசின் பொதுச் செலவுகளுக்காகவும் பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை திரட்டுவதற்காக ஐரோப்பிய ஆணையம் சர்வதேச நிதிச் சந்தைகளில் இருந்து கடன் பெற திட்டமிட்டுள்ளது.
ரஷ்யா முக்கிய உட்கட்டமைப்புகள் மற்றும் கருங்கடல் வர்த்தகப் பாதைகள் மீது தாக்குதல்களை அதிகரித்திருப்பதால், உக்ரைனுக்கு கூடுதல் நிதி ஆதரவு அவசியமாகியுள்ளது என்று ஐரோப்பிய பொருளாதார ஆணையர் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ் தெரிவித்துள்ளார்.
திட்டத்தை வரவேற்ற ஜெலென்ஸ்கி
இதற்கிடையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்தத் திட்டத்தை வரவேற்று, இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் பட்ஜெட் தேவைகளில் குறிப்பிடத்தக்க பகுதியை பூர்த்தி செய்யும் என்று கூறியுள்ளார். மேலும், அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்தத் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |