உக்ரைன் தொடர்பில் ஐரோப்பாவின் இரட்டை நிலை... ரஷ்யாவுக்கு கொட்டிக்கொடுத்த பல பில்லியன் தொகை
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு நிதி உதவி செய்வதை விட ரஷ்ய எரிபொருட்களுக்கு அதிக பணத்தை செலவிட்டுள்ளதாக புதிய அறிக்கை ஒன்றில் அம்பலமாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம்
உக்ரைன் போரையடுத்து அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்தியதுடன், பல ஆயிரம் தடைகளும் விதித்தது. அத்துடன், உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் பொருளாதார உதவிகளும் முன்னெடுக்கப்பட்டது.
ஆனால் தற்போது வெளிவந்துள்ள அறிக்கையில், போரின் மூன்றாம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை 21.9 பில்லியன் யூரோ மதிப்பில் வாங்கியதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆனால் 2024ல் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை என்பது 18.7 பில்லியன் யூரோ என்றே தெரிய வந்துள்ளது. 2022 பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவது என்பது உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு நிதியுதவி அளிப்பது போன்ரது என்றே அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எரிபொருள் ஏற்றுமதி
2024 ல், ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு ஒதுக்கியதை விட ரஷ்ய எரிபொருள் இறக்குமதிக்கு 39 சதவிகிதம் அதிகமாக செலவிட்டுள்ளது. மேலும், 1990 காலகட்டத்தில் குவைத் போரின் போது ஜேர்மனி அளித்துள்ள உதவிகளில் ஒருபங்கு கூட உக்ரைனுக்காக அந்த நாடு செலவிடவில்லை.
மட்டுமின்றி, உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பின் மூன்றாம் ஆண்டில், உலகளாவிய எரிபொருள் ஏற்றுமதியிலிருந்து ரஷ்யா 242 பில்லியன் யூரோ தொகையை சம்பாதித்ததாகவும் அறிக்கை கண்டறிந்துள்ளது.
ரஷ்யா தனது வரி வருவாயில் பாதியை எண்ணெய் மற்றும் எரிவாயு துறையிலிருந்து பெறுகிறது. மேலும், பழைய மற்றும் காப்பீடு செய்யப்படாத டேங்கர் கப்பல்களைப் பயன்படுத்தி எரிபொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் சர்வதேச தடைகளைத் தவிர்க்க முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |