எலோன் மஸ்க் மீதான விசாரணையை தீவிரப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
எலோன் மஸ்க்கின் சமூக ஊடக நிறுவனமான எக்ஸ், ஐரோப்பிய ஒன்றிய விதிகளை மீறியதா என்பது குறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 15 ஆம் திகதிக்குள்
டிசம்பர் 2023 ல் எக்ஸ் தளத்திற்கு எதிரான விசாரணையைத் தொடங்கிய ஐரோப்பிய ஆணையம், பயனர்களுக்கு உள்ளடக்க பரிந்துரைகளை வழங்கும் அதன் பரிந்துரை அமைப்பு மற்றும் அதில் செய்யப்பட்ட சமீபத்திய மாற்றங்கள் குறித்த உள் ஆவணங்களை பிப்ரவரி 15 ஆம் திகதிக்குள் வழங்குமாறு நிறுவனத்தைக் கோரியுள்ளது.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் எலோன் மஸ்கின் எக்ஸ் தளம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. முன்னதாக பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிரான விசாரணைகளை மறுபரிசீலனை செய்வதாக இந்த வார தொடக்கத்தில் வந்த செய்திகளை ஐரோப்பிய ஆணையம் நிராகரித்தது.
மட்டுமின்றி, விசாரணை மற்றும் நடவடிக்கைகள் வழக்கம் போல் தொடர்கின்றன என்றும், அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் பொறுப்புக்கு வருவது ஐரோப்பிய ஆணையத்தின் சட்டங்களை அமுல்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை பாதிக்கவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக எதிர்வரும் திங்களன்று டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்கவிருக்கிறார். ஆனால் அவரது முதல் ஆட்சி காலத்திலேயே ஐரோப்பிய ஒன்றியத்தில் பல்வேறு கொள்கைகளில் அவர் வேறுபட்டிருந்தார்.
மறைமுக திட்டம்
மேலும் பேஸ்புக் நிறுவனரும் ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளை எதிர்த்துப் போராட ட்ரம்பின் உதவியை நாடியிருந்தார். இந்த நிலையில், ட்ரம்பின் நெருக்கமான நட்பு வட்டத்தில் இருக்கும் எலோன் மஸ்க்கும் ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளுடன் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார்.
மட்டுமின்றி, சமீப மாதங்களில் ஐரோப்பிய நாடுகளின் அரசியலிலும் தலையிட்டு வருகிறார். ஜேர்மனியில் அடுத்த மாதம் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தீவிர வலதுசாரி கட்சி ஒன்றை வெளிப்படையாக ஆதரித்து, ஜேர்மானிய மக்களின் எதிர்காலம் அவர்கள் தான் என கருத்து தெரிவித்திருந்தார்.
மட்டுமின்றி, பிரித்தானியாவின் வலதுசாரி சீர்திருத்தக் கட்சியை ஆதரித்தும் தமது கருத்தை வெளிபப்டுத்தியுள்ளார். இதனையடுத்தே, தீவிர வலதுசாரிகளை ஆதரித்து ஐரோப்பாவை பலவீனப்படுத்தும் எலோன் மஸ்கின் மறைமுக திட்டம் இதுவென ஜேர்மனியின் முதன்மையான அரசியல் தலைவர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஆனால் இந்த விமர்சனம் ஜனநாயகம் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது என்று மஸ்க் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |