உக்ரைன் பொருளாதாரத்தை மீட்க உதவும் ஐரோப்பிய ஒன்றியம்! ஜெலென்ஸ்கி வரவேற்பு
உக்ரைனிய ஏற்றுமதிகள் மீதான இறக்குமதி வரிகளை இடைநிறுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டங்களை அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வரவேற்றுள்ளார்.
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று, ரஷ்யாவின் பேரழிவுகரமான படையெடுப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிய பொருளாதாரத்தை "பராமரிப்பதற்கு" இந்த நடவடிக்கை உதவும் என்று கூறி, உக்ரேனிய பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை நிறுத்தும் ஐரோப்பிய ஒன்றிய திட்டங்களை வரவேற்றார்.
"இது உக்ரைனில் எங்கள் பொருளாதார நடவடிக்கைகளை அதிகபட்சமாக பராமரிக்கவும், நமது தேசிய உற்பத்தியைப் பாதுகாக்கவும் அனுமதிக்கும்" என்று ஜெலென்ஸ்கி தனது டெலிகிராம் சேனலில் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி வரிகளை நிறுத்தி வைப்பதற்கான முன்மொழியப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டம் நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த திட்டம் ஒன்றியத்தின் 27 உறுப்பினர்களின் வாக்கெடுப்பில் இன்னும் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
இந்த முயற்சி குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் விவாதித்ததாக ஜெலென்ஸ்கி கூறினார். "இந்த நடவடிக்கைக்காக அவருக்கு தனிப்பட்ட முறையில் அவருக்கும், எங்கள் அனைத்து ஐரோப்பிய நண்பர்களுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்," என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
மேலும், "உலகளாவிய விலை நெருக்கடியைத் தூண்டுவதற்கு ரஷ்யா முயற்சிக்கிறது" என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உலக உணவு சந்தையில் "குழப்பத்தை" தூண்டியதாகவும் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டம் ஐரோப்பிய மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கும் குறிப்பிடத்தக்க நெருக்கடி எதிர்ப்பு கருவியாக இருக்கும் என்றும், உக்ரேனிய ஏற்றுமதிகள் சந்தைகளை உறுதிப்படுத்த உதவும் மற்றும் அனைத்து ஐரோப்பியர்களும் இந்த நடவடிக்கையால் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும் பல நாடுகள் உக்ரைனிய ஏற்றுமதிகளை விரைவில் தாராளமயமாக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.